கேரள திரைப்பட விழாவில் மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களை திரையிட முடிவு
கேரள சர்வதேச திரைப்பட விழாவில், தேர்வாகி மத்திய அரசின் அனுமதி மறுக்கப்பட்ட பாலஸ்தீன படங்கள் திட்டமிட்டபடி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
திருவனந்தபுரத்தில், கேரள சல்சித்ரா அகாதெமியின் ஒருங்கிணைப்பில் கடந்த டிசம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகின்றது.
இந்த விழாவில் தேர்வான, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 19 படங்களைத் திரையிடுவதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் அனுமதி வழங்க மறுத்தது. 4 படங்களுக்கு மட்டும் தற்போது திரையிட அனுமதிக்கப்பட்டன.தேர்வான திரைப்படங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான, காரணங்களை மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் அனுமதி கிடைக்காத சுமார் 15 படங்கள் விழாவில் திட்டமிட்டபடி திரையிடுவதற்கு முடிவு செய்துள்ளதாக, கேரள சல்சித்ரா அகாதெமியின் தலைவர் ரெசூல் பூக்குட்டி இன்று அறிவித்துள்ளார்.
கேரளத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரி அரசின் ஆதரவைத் தொடர்ந்து திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் இந்த முடிவை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான பாலஸ்தீன விவகாரம் குறித்த படங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலில் மறைந்த புகழ்பெற்ற சோவியத் இயக்குநர் செர்ஜி ஐசென்ஸ்டீனின் 100 ஆண்டுகள் பழமையான "பேட்டில்ஷிஃப் பொட்டெம்கின்" எனும் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.