வைரலாகும் திலீப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
திலீப் நடித்த ‘ப ப ப’ திரைப்படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது;
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், திலீப். கடந்த 30 ஆண்டு சினிமா வாழ்க்கையில், 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர். இவர் நடிப்பில், ‘ப ப ப’ (bha bha ba) என்ற திரைப்படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது. ‘பயம் பக்தி பகுமானம்’ என்பதின் சுருக்கமாக இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. போலீசால் தேடப்படும் குற்றவாளியாக திலீப் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் திலீப்புக்கு மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கும் என்று அவரது ரசிகர்களும், மலையாள திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூறி வருகிறார்கள். இந்தப் படத்தை தனஞ்செய் சங்கர் என்ற புதுமுகம் இயக்கியுள்ளார். படத்திற்கான கதையை பஹிம் ஷாபர், நூரின் ஷெரீப் ஆகியோர் எழுதி இருக்கின்றனர். இந்தப் படத்தில் கதாநாயகி இல்லை என்று கூறப்படுகிறது.
திலீப் முதன்மை கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், வினீத் சீனிவாசன், தயன் சீனிவாசன் போன்ற இளம் ஹீரோக்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தவிர தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடன இயக்குனர் சாண்டி, சரண்யா பொன்வண்ணன், நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் இருக்கிறார்கள். அதோடு மலையாளத்தைச் சேர்ந்த பாலு வர்கீஸ், பைஜூ சந்தோஷ், சித்தார்த் பரதன், அசோகன், தேவன், சலிம்குமார் உள்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இருக்கிறது.
இந்நிலையில், மோகன்லால், திலீப் இணைந்து நடித்துள்ள பா பா பா என்ற படத்தின் முதல் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்தப் படத்திலிருந்து ‘அழிஞ்சாட்டம்’ பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்தப் பாடலில் இருவரின் நடனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
நடிகை மீதான பாலியல் குற்ற வழக்கில் திலீப் குற்றமற்றவர் என சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. கடந்த 8 ஆண்டுகளாக எதிர்மறை விமர்சனங்களால் மன உளைச்சலில் இருந்த திலீப்பிற்கு, ‘ப ப ப’ திரைப்படம் வெற்றியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.