என்னை பலர் முதுகில் குத்தியுள்ளார்கள் - நடிகர் ஆனந்தராஜ்
ஆனந்தராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மெட்ராஸ் மாபியா கம்பெனி’ படம் வரும் 14ந் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
'பாஷா, சூர்ய வம்சம் மற்றும் போக்கிரி' போன்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பெயர் பெற்றவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் ‘மெட்ராஸ் மாபியா கம்பெனி’என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.அண்ணா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை இப்படத்தை தயாரிக்கிறார். முனிஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் படமாக இது உருவாகிறது. இந்த படம் வருகிற நவம்பர் மாதம் 14ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார் நடிகர் ஆனந்தராஜ்.அப்போது அவர் “இந்தப் படத்தில் என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. என்னால் பயமுறுத்தவும் முடியும், சிரிக்க வைக்கவும் முடியும். ஆனால், இந்த திறமையை என்னிடம் வளர்த்தவர்கள் இந்த இயக்குநர்கள்தான்.எங்களிடம் பணம் குறைவாக இருக்கலாம், ஆனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.நான் இந்த துறைக்கு வரும்போது எனக்கு யாரும் கிடையாது; எந்தப் பின்புலமும் கிடையாது.என்னை விட இந்தத் திரைத்துறையை அதிகம் நேசித்தவர் என் தந்தை.
நான் ஒரு நடிகராக இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு என் அப்பா முக்கிய காரணம். இன்று எனக்கு இந்தத் திரைத்துறையில் போட்டி இல்லை என்று நினைக்கிறீர்களா? சராசரி நடிகன் தான். என்னை பலர் முதுகில் குத்தியுள்ளார்கள், அதையெல்லாம் தாண்டித்தான் வந்துள்ளேன். வீட்டுக்கு வந்து ஒரு படத்துக்குப் பேசுவார்கள், ஆனால் அந்தப் படத்தில் நான் இருக்க மாட்டேன். ஒரு கலையை கலையாக மட்டும் பாருங்கள். மெட்ராஸ் மாபியா கம்பெனி குறித்த நேரத்தில் முடிக்கக் காரணம் இயக்குநர்” என தெரிவித்துள்ளார்.