பிரித்விராஜை சினிமாதுறையிலிருந்து அழிக்க முயல்வதாக தாயார் குற்றச்சாட்டு

பிருத்விராஜை குறிவைத்து தவறான பிரச்சாரம் பரப்பப்படுவதாக பிரித்விராஜின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.;

Update:2025-11-29 18:23 IST

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக திகழ்பவர் பிருத்விராஜ். மலையாளம், தமிழ் படங்களில் கதாநாயகனாக வலம்வரும் பிருத்விராஜ் கடந்த 2019 ல் மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் 2ம் பாகமான எம்புரான் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்த படத்தில் 2002 குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையை காட்சிப்படுத்தியதால் இந்து அமைப்புகள் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் எதிர்ப்பை சம்பாதித்தார் பிருத்விராஜ்.

இந்நிலையில் மலையாள ஊடகங்களுக்கு மல்லிகா சுகுமாரன் அளித்த பேட்டியில் “பிருத்விராஜை குறிவைத்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து தவறான பிரச்சாரம் பரப்பப்படுகிறது. இது அவரை சினிமா தொழிலில் இருந்து நீக்க திட்டமிட்ட முயற்சி” என்று கூறினார்.

ஜெயன் நம்பியார் இயக்கிய பிருத்விராஜின் சமீபத்திய திரைப்படமான 'விலாயத் புத்தா' கடந்த நவம்பர் 21 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் படம் வெளியானதிலிருந்து ஒரு குழு தனது மகனை வேண்டுமென்றே குறிவைத்து வருவதாகவும் அவர்கள் பிருத்விராஜை தொழில் ரீதியாக மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் அவமானப்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் பிரித்விராஜின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபல மலையாள நாவலை தழுவி சந்தன மரகடத்தல் பற்றிய கதைக்களத்துடன் எடுக்கப்பட்ட 'விலாயத் புத்தா' எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்தின் காட்சிகளை தவறாக சித்தரித்ததாகவும், வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டும் நோக்கில் அவற்றை திரித்து கூறியதாகவும் கூறி படத்தின் தயாரிப்பாளர் அளித்த புகாரின் பேரில் ஒரு யூடியூப் சேனலுக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்