ரஜினிகாந்தின் திரைப் பயணம் : அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை...!

தமிழ் சினிமாவில் மிக எளிமையாக அறிமுகமான இவரை, ரசிகர்கள் 'சூப்பர் ஸ்டார்' எனும் மகுடத்துடன் தற்போது வரை கொண்டாடி வருகின்றனர்.;

Update:2025-08-13 15:11 IST

சென்னை,

டிசம்பர் 12, 1950ம் ஆண்டு பெங்களூருவில் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்த் பிறந்தார். சினிமா உலகில் நுழைவதற்கு முன்பு பெங்களூரு போக்குவரத்து துறையில் நடத்துனராக பணிபுரிந்தார். அப்போதே தனது தனித்துவமான ஸ்டைலான பாவனைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்நாளில் சினிமா ஆளுமையாக வருவதற்கான அனைத்து பண்புகளும் அவருக்கு அப்போதே இருந்தது.

ரஜினிகாந்த் நடிப்பில் 1975-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த  'அபூர்வ ராகங்கள்' திரைப்படம், அவரது திரையுலக அறிமுகத்தை உலகிற்கு அறிவித்தது.

தமிழ் சினிமாவில் மிக எளிமையாக அறிமுகமான இவரை, ரசிகர்கள் 'சூப்பர் ஸ்டார்' எனும் மகுடத்துடன் தற்போது வரை கொண்டாடி வருகின்றனர்.

கர்நாடக போக்குவரத்து துறையில் நடத்துனராக பணியாற்றிய சமயத்தில், அரசு துறைகளுக்கு இடையே நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் துரியோதனன் கதாபாத்திரத்தில் நடித்தார். ரஜினியின் நடிப்பை பார்த்து அவருடைய நண்பரும், சக ஊழியருமான ராஜ் பகதூர் சினிமாவில் நடிக்க முயற்சிக்கும்படி வலியுறுத்த, அதனைத் தொடர்ந்தே சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார், ரஜினிகாந்த்.

'அபூர்வ ராகங்கள்' மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த அவருக்கு, முதலில் சிறிய காதாபாத்திரங்களே கிடைத்தன. அதனை தொடர்ந்து, வில்லன் வேடங்களிலும் நடித்தார். அப்போது முதலே நடிக்கும் கதாபாத்திரங்கள் எதுவாக இருந்தாலும் தன்னுடைய தனித்துவத்தை பதிவு செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார். தனக்கென தனி ஸ்டைல் ஒன்றை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

வசன உச்சரிப்பு, ஸ்டைலான மேனரிசம் என தனி அடையாளத்துடன் வலம் வரத் தொடங்கிய ரஜினிகாந்த், 'பைரவி' திரைப்படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். எளிய நடிகராக சினிமாவில் அறிமுகமாகி பைரவி, 16 வயதினிலே, 6 புஷ்பங்கள், முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோகேட்ட குரல் போன்ற திரைப்படங்களில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். '16 வயதினிலே' திரைப்படத்தில் இவர் பேசும், "இது எப்படி இருக்கு.." என்ற வசனம் இன்றளவும் பேசப்படுகிறது.

அழுத்தமான கதாபாத்திரங்களை தொடர்ந்து தனிக்காட்டுராஜா, போக்கிரிராஜா, பில்லா, முரட்டுக் காளை, ராணுவ வீரன், உள்ளிட்ட படங்களில் மாஸ் ஹீரோவாக மாறத் தொடங்கினார். அதுவே, ரஜினியின் அடையாளமாக மாறத் தொடங்கியது.

பணக்காரன், தர்மத்தின் தலைவன், ஸ்ரீ ராகவேந்திரா, மிஸ்டர் பாரத், படிக்காதவன், ஊர்க்காவலன், வேலைக்காரன், ராஜாதி ராஜா, இவரின் கேரியருக்கு முக்கிய படமாக அமைந்தது.

அழுத்தமான கதைக்களம், அதிரடி சண்டைக் காட்சி என பயணித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தால், முழுநீள நகைச்சுவைப் படத்திலும் நடிக்க முடியும் என்று என நிரூபித்த திரைப்படம் 'தில்லு முல்லு'. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு அன்று முதல் இன்று வரை ரஜினி ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கிறது என்றால், அது ரஜினிகாந்த் நடிப்புக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. 

தனது ஸ்டைலுக்கு முக்கியத்துவம் அளிக்க ரஜினிகாந்த் எப்போதும் தவறியதே இல்லை. சிகரெட்டை தூக்கி போட்டு வாயில் பிடிப்பது, தலையை கோதுவது, துப்பாக்கியை சுழற்றுவது என்று இவரது ஸ்டைலே ரசிகர்கள் விரும்பும் தனி ரகம்தான். இவரது நடைக்கும், பேச்சுக்கும் இன்றளவும் ரசிகர்களாக குழந்தைகளும் உள்ளனர் என்றால் மிகையல்ல.

இவரது ஸ்டைலை புகழ்ந்து சொல்லும் அளவிற்கு பல பஞ்ச் டயலாக்குகளும், பாடல்களும் உருவாக்கப்பட்டன. "ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான், வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் உங்கள விட்டு போகல, நீங்க எது பண்ணாலும் ஸ்டைல் தான்" என்று இவருக்காகவே எழுதப்பட்ட வசனங்கள் பல உண்டு.

ஒருகட்டத்திற்குப் பிறகு ரஜினி நடித்தாலே படம் வெற்றி எனும் நிலை உருவானது. எஜமான், தளபதி, மன்னன், அண்ணாமலை, வீரா, பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா என அடுத்தடுத்து அவரது படங்களின் மெகா வெற்றி வசூல் மன்னனாக அவரை உருவெடுக்க வைத்தது.

(பாபா, குசேலன்) இடையில் சில சறுக்கல்கள் இருந்தாலும், அசராமல் எழுந்து வெற்றிப் பயணத்தைத் தொடர அவர் ஒருபோதும் தவறியதே இல்லை.

எந்திரன், கபாலி, 2 பாயிண்ட் ஓ, பேட்ட, அண்ணாத்த, ஜெயிலர் என அவரது படங்கள் இப்போதும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றன. தற்போது, அவரது திரையுலக பொன் விழா ஆண்டில்  வெளியாகும் கூலி திரைப்படமும் ரசிகர்களின் ஏகபோக ஆதரவை பெற்றுள்ளன.

இதுவரை, தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் சுமார் 170 படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலத்தில் இவர் நடித்து வெளியான பிளட் ஸ்டோன் 1988ல் வெளியானது.

பெற்ற விருதுகள்:

1984ல் தமிழக அரசின் கலைமாமணி விருதும், 1989ல் எம்.ஜி.ஆர் விருதும் 2007ல் மராட்டிய அரசின் ராஜ்கபூர் விருதையும் பெற்றார். 2011ல் எம்ஜிஆர்-சிவாஜி விருது மற்றும் 2000ல் பத்மபூஷன் விருதையும், இன்று 2016ல் பத்மவிபூஷன் (4-12-2016) விருதையும் வழங்கி இந்திய அரசு பெருமைப் படுத்தியுள்ளது.

முள்ளும்மலரும், மூன்றுமுகம், முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி உள்ளிட்ட ஆறு படங்களுக்காகவும் தமிழ்நாடு மாநில விருதிற்கு தேர்வாகி, ஆறிலும் சிறந்த நடிகர் விருதினைப் பெற்றார் ரஜினி.

சினிமாவில் தாதா சாகேப் பால்கே விருது எனும் கெளவரத்தைப் பெற்றதோடு, சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்தும் ரஜினிகாந்தை தொடர்ந்து உச்ச நட்சத்திரமாக ஒளிர வைத்துக் கொண்டிருக்கிறது.

அவரது திரைப்பயணத்தில் அவர் சந்தித்த சவால்களும், அவற்றை அவர் எதிர்கொண்ட விதமும் திரையுலகில் சாதிக்க துடிக்கும் நடிகர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்