'படங்களை மோசமாக விமர்சித்தாலும் சந்தோஷப்படுங்கள்.. அதுவும் பப்ளிசிட்டி தானே'- ஆர்.வி.உதயகுமார்
டைரக்டர் ஆர்.வி உதயகுமார் ‘இரவின் விழிகள்' பட விழாவில் கலந்து கொண்டு பேசினார்.;
சென்னை,
சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் மகேந்திரன் தயாரித்து, நடிக்கும் ‘இரவின் விழிகள்' படம் விரைவில் திரைக்கு வருகிறது. நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி ராமச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பட விழாவில் டைரக்டர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது, ‘‘ஆஸ்கார் விருது தேர்வில் போட்டியிட தெலுங்கு, கன்னட படங்கள் செல்லும்போது, தமிழில் இருந்து படங்கள் தேர்வாகவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. தமிழ் படைப்பாளர்களிடம் படைப்பாற்றல் எங்கே போனது?
சிறு பட தயாரிப்பாளர்களுக்கு, அவர்களின் படங்கள் எந்த தியேட்டரில், எந்த காட்சியில் ஓடுகிறது? என்பதுகூட தெரியாமல் இருக்கிறது. ரசிகர்கள் மொத்தமாக பல படங்களை பார்ப்பதற்கு வசதியாக வெளிநாடுகளில் இருப்பது போல சலுகைகளை தியேட்டர் உரிமையாளர்கள் அறிவியுங்கள்.
படத்தை மோசமாக விமர்சிக்கிறார்களே... என்று திட்டுகிறோம். அப்படியாவது நம் படத்தை பற்றி ஏதாவது பேசுகிறார்களே என்று சந்தோஷப்படுங்கள். அதுவும் ஒருவகையில் படத்துக்கு பப்ளிசிட்டி தானே...'', என்றார்.