புகழ்பெற்ற வங்காள நடிகை ஜெயஸ்ரீ கபீர் காலமானார்

இந்தியாவில் மட்டுமின்றி, வங்காளதேசத்திலும் ஜெயஸ்ரீ கபீர் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார்.;

Update:2026-01-16 15:12 IST

லண்டன்,

புகழ்பெற்ற வங்காள திரைப்பட நடிகையும், முன்னாள் மிஸ் கொல்கத்தாவும் ஆன ஜெயஸ்ரீ கபீர், கடந்த 12-ந்தேதி லண்டனில் காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1968-ல் ‘மிஸ் கொல்கத்தா’ பட்டத்தை வென்ற இவர், பழம்பெரும் இயக்குநரான சத்யஜித் ரே இயக்கிய 'பிரதித்வந்தி' (1969) திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கொல்கத்தாவில் 'பிக்னிக்', 'சப்யசாச்சி' உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜெயஸ்ரீ கபீர், இந்தியாவில் மட்டுமின்றி, வங்காளதேசத்திலும் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார்.

இவர் கடந்த 1975-ம் ஆண்டு ஆலம்கிர் கபீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் சில வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது. அதன்பிறகு கொல்கத்தா வந்த ஜெயஸ்ரீ கபீர், பின்னர் லண்டனில் குடியேறி அங்கு தனது கல்வி பயணத்தை தொடர்ந்தார். லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பேராசிரியராகவும் ஜெயஸ்ரீ பணியாற்றியுள்ளார்.

இவருக்கு லெனின் சவுரவ் கபீர் என்ற ஒரு மகன் உள்ளார். பெரும்பாலும் அமைதியான, தனிமையான வாழ்க்கையை மட்டுமே விரும்பிய ஜெயஸ்ரீ, பொது நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்தார். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சமயத்திலும், அவரைப் பற்றிய தகவல் வெளியே பரவாமல் பார்த்துக் கொண்டார். சிகிச்சை பலனின்றி ஜெயஸ்ரீ உயிரிழந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி குறித்த அறிவிப்பை ஜெயஸ்ரீயின் உறவினரான ஜாவேத் மஹ்மூத் வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்