‘ராமாயணம்’ படத்திற்கு இசையமைப்பது குறித்து மனம்திறந்த ஏ.ஆர்.ரகுமான்

குறுகிய மனப்பான்மையில் இருந்து விடுபட்டால்தான் பிரகாசிக்க முடியும் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-16 15:48 IST

மும்பை,

வால்மீகி எழுதிய ‘ராமாயணம்’ கதையை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் ஏராளமான திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேடை நாடகம் முதல் 3டி தொழில்நுட்பம் வரை ராமாயண கதை தலைமுறைகளை கடந்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில், மிகப்பெரிய பொருட்செலவில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக நடிகர் ரன்பீர் கபூரும், சீதையாக நடிகை சாய் பல்லவியும் நடிக்கின்றனர். ராவணன் கதாபாத்திரத்தை கன்னட நடிகர் யாஷ் ஏற்றுள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கும் இந்த படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது.

இதில் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம், இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற 2 இசையமைப்பாளர்கள் பணியாற்றுவதுதான்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானும், ‘லயன் கிங்’, ‘கிளாடியேட்டர்’ ‘இன்டர்ஸ்டெல்லார்’ உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற படங்களுக்கு இசையமைத்த ஹான்ஸ் ஜிம்மரும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். இவர்கள் இருவருமே தலா 2 ஆஸ்கார் விருதுகளை வென்றவர்கள் ஆவர்.

இந்திய அளவிலும் ஹான்ஸ் ஜிம்மருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாச திரைப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானுடன், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும் இந்துக்களின் புராண காவியமான ராமாயணத்திற்கு மாற்று மதங்களைச் சேர்ந்த 2 இசையமைப்பாளர்கள் இசையமைப்பது குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

“நான் ஒரு இஸ்லாமியர். ஹான்ஸ் ஜிம்மர் ஒரு யூதர். ‘ராமாயணம்’ இந்து மதம் சார்ந்தது. நாங்கள் இருவரும் அந்த படத்திற்கு சேர்ந்து இசையமைப்பது பெருமையாக இருக்கிறது. இதுகுறித்து பலர் கேள்வியெழுப்பலாம். நான் பிராமண பள்ளியில் படித்தவன். எனக்கு ‘ராமாயணம்’ கதை பரிச்சயமானதுதான். லட்சியம், ஒழுக்கம் பற்றிய கதை அது.

நல்லவர்கள், கெட்டவர்கள், அரசர், யாசகர் என யாரிடம் இருந்து அறிவை பெற்றாலும், அது விலைமதிப்பற்றதுதான் என தீர்க்கத்தரிசி ஒருவர் கூறியுள்ளார். அதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை. குறுகிய மனப்பான்மையில் இருந்து நாம் விடுபட வேண்டும். அப்போதுதான் பிரகாசிக்க முடியும்.’’

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்