“துரந்தர்” படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா

ரன்வீர் சிங் நடித்த ’துரந்தர்’ படம் 21 நாட்களில் உலகளவில் ரூ.1,000 கோடி வசூல் செய்துள்ளது.;

Update:2026-01-03 20:04 IST

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘துரந்தர்’. 'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக நடித்து கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன் இதில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர்.

’துரந்தர்’ படம் இந்து - முஸ்லிம் பிரச்சினை தூண்டுவதாக வெளியான விமர்சனத்தால் அரபு நாடுகள் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன. இருப்பினும், வசூலில் வேகம் குறையாமல் ’துரந்தர்’ வலம் வருகிறது. பாகிஸ்தானில் உளவுப்பணி பார்க்கும் இந்திய ராணுவ வீரரின் கதையாக உருவான இப்படம் பல உண்மைச் சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

’துரந்தர்’ படம் 21 நாட்களில் உலகளவில் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த மாதம் 5ம் தேதி வெளியானது. ‘துரந்தர்’ படம் 17 நாட்களில் உலகளவில் ரூ. 870 கோடி வசூல் செய்து ‘காந்தாரா சாப்டர் 1’ சாதனையை முறியடித்தது. லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை கவர்னர் 'துரந்தர்' படத்துக்கு லடாக்கில் வரி விலக்கு அளித்துள்ளார்.

இந்நிலையில் சூர்யா ‘துரந்தர்’ படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “துரந்தர் சிறப்பான படம். ஒரு தலைசிறந்த படத்தை வழங்கிய ஆதித்யாவிற்கு நன்றி. உங்களின் கிராப்ட்டை கண்டு வியக்கிறேன். உங்களுக்கும் குழுவிற்கும் என் அன்பும் மரியாதையும். சகோதரர் மாதவனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். அக்சய் கன்னா... என்ன ஒரு மாற்றம். மிகவும் தகுதியான பிளாக்பஸ்டருக்காக ரன்வீர் சிங்கிற்கு வாழ்த்துக்கள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்