''அதனால்தான் படங்களில் நடிப்பதில்லை'' - ''வேட்டையாடு விளையாடு'' பட நடிகை
தமிழில் ''வேட்டையாடு விளையாடு'' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கமலினி முகர்ஜி.;
சென்னை,
2004-ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான ''பிர் மிலேங்கே'' மூலம் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் கமலினி முகர்ஜி. தொடர்ந்து, அதே ஆண்டு ''ஆனந்த்'' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். கடைசியாக தெலுங்கில் ''ராம்லீலா'' படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் ''வேட்டையாடு விளையாடு'' திரைப்படத்தின் மூலமும், மலையாளத்தில் ''குட்டி ஸ்ராங்கு'' மூலமும் அறிமுகமானார். தொடர்ந்து, பல ஆண்டுகளாக, கமல்ஹாசன், சிரஞ்சீவி, நாகார்ஜுனா மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றினார்.
பின்னர் 2016-ம் ஆண்டு திரையுலகிலிருந்து முற்றிலுமாக விலகினார். கடைசியாக ''புலி முருகன்'' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் படங்களில் நடிக்காததற்கான காரணத்தை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், '' இயக்குனர் ஒரு காட்சியை நடிக்கச் சொல்வார். அது தேவையில்லை என்றால் எடிட்டிங்கில் நீக்கிவிடுவார்கள். அதை அவர்கள் சொல்ல மாட்டார்கள். ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நம் காட்சியும் வசனங்களும் நீக்கப்படும்போது மிகவும் வலிக்கும்.
தெலுங்கில் ''ராம்லீலா'' படத்தில் நடித்திருந்தேன். அதில் எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததுபோல் உணர்ந்தேன். படம் முடிந்ததும், நான் நடித்ததை பார்த்த பிறகு வெட்கமாக இருந்தது. அதற்காக நான் சண்டையிடவோ, வம்பு செய்யவோ விரும்பவில்லை. அதனால்தான் ''ராம்லீலா''வுக்குப் பிறகு தெலுங்கில் நடிக்க கூடாது என்று முடிவு செய்தேன். தெலுங்கு படங்களை விட்டுவிட்டு, மற்ற மொழிகளில் நடித்தேன்.
புலி முருகன் (2016) படத்திற்குப் பிறகு நான் திருமணம் செய்து கொண்டேன். அதனால்தான் படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவிட்டேன். நான் இளமையாக இருந்தபோது படிப்பில் கவனம் செலுத்தினேன். வளர்ந்ததும், படங்களில் நடித்தேன். இப்போது ஒரு மனைவியாக குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்.