“இறுதி முயற்சி” பட கதையின் வாழ்வியல் என்னை உலுக்கியது - நடிகர் ரஞ்சித்

ரஞ்சித், மெகாலி நடித்துள்ள ‘இறுதி முயற்சி’ படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது.;

Update:2025-09-30 14:30 IST

சென்னை,

வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ திரைப்படத்தினை இயக்குனர் நடிகர் திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கி உள்ளார். ரஞ்சித், மெகாலி, மீனாட்சி , விட்டல் ராவ் கதிரவன் புதுப்பேட்டை சுரேஷ் இன்னும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

‘இறுதி முயற்சி’ திரைப்படம் சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையை சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இறுதி முயற்சி திரைப்படம் உருவாகியுள்ளது. தற்கொலை குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி எமோஷனல் திரில்லராக படம் தயாராகி உள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டனர்.

இவ்விழாவில் நடிகர் ரஞ்சித் பேசுகையில், “சினிமாவை.. நிலாவை ரசிப்பது போல் இதயத்தில் வைத்து ரசித்துக் கொண்டிருப்பேன். அதனால் எனக்கு சினிமா மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. இந்தத் தருணத்தில் தான் இயக்குநர் வெங்கட் ஜனா என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார். முதலில் இதற்கு தயக்கம் தெரிவித்தேன். அதன் பிறகு இந்தக் கதையில் நான் ஏன் நடிக்க வேண்டும்? என கேட்டேன். இந்த கதையை திரைக்கதையாக எழுதி என்னிடம் வாசிக்குமாறு சொன்னார். அந்த கதையை படித்ததும் பிடித்துப் போனது. ஏனெனில் அந்த கதையின் வாழ்வியல் என்னை உலுக்கியது.

இந்தப் படத்தில் கமர்சியல் அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும் கதைக்கு தேவையான உண்மைத் தன்மையை திரைக்கதையில் நம்பக தன்மையுடன் இயக்குநர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. எங்கும் போரடிக்கவில்லை. ஆனால் இந்த படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறுமா..? என்றால்.. என்னால் உறுதி கூற இயலாது. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால்... ரசிகர்களுக்கு பிடித்திருந்தால்... இந்தப் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்