அடுத்த படம் இவருடன்தான் - இயக்குனர் மாரி செல்வராஜ்
தனுஷின் அடுத்த படத்தை ஐசரி கணேஷ் மற்றும் வுண்டர்பார் இணைந்து தயாரிக்கிறார்கள் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் இயக்கி நடித்து இட்லி கடை படம் கடந்த 1ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'இட்லி கடை' படத்தை தொடர்ந்து 'தேரே இஷ்க் மெயின்' என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதற்கிடையில், போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக "டி54" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். தனுஷின் 55-வது படத்தை 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். ‘டி56’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். சாய் பல்லவி தனுஷுடன் மீண்டும் இப்படத்தில் ஜோடி சேர்கிறார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் தனது அடுத்த படம் நடிகர் தனுஷ் உடன் என உறுதியளித்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசன்’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நிவாஸ் கே. பிரசன்னா இசையில் உருவாகியுள்ள அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
பைசன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மாரி செல்வராஜ் “பைசன் படத்துக்குப் பிறகு தனுஷ் சார் படம்தான். ஐசரி கணேஷ் மற்றும் வுண்டர்பார் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். வரலாற்று சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும். பைசன் முன்னமே பா. ரஞ்சித்துடன் சொல்லியதால் தற்போது முடித்தேன். தாணு சார், ஐசரி கணேஷ் உடன் படம் இருக்கிறது. ஆனால், முதலில் தனுஷ் படம்தான் நான் ஒப்புக்கொண்டேன் என்பதால் அடுத்து அந்தப் படம்தான்” என்றார்.