''கூட்டம் சேரும் இடங்களுக்கு குழந்தைகளுடன் போவதை தவிர்க்க வேண்டும்'' - லதா ரஜினிகாந்த்
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு லதா ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு லதா ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''ஜனங்களே, பொதுமக்களே, என் அன்பான தமிழ் மக்களே... எங்கு கூட்டம் சேர்ந்தாலும் பாதுகாப்பை மட்டும் விட்டுவிடாதீர்கள். குழந்தைகள், பெண்களால் கடைசி நிமிடத்தில் ஓடமுடியாது. நெரிசல் ஏற்பட்டபின் அந்த இடத்திலிருந்து நாம் நகர்வது கடினமான விஷயம்.
நாம் தொலைத்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? அவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பற்றி என்ன தெரியும்? அப்படிப்பட்டவர்கள் இன்று இல்லை என நினைக்கும்போது மனம் பதறுகிறது.
இனியும் இப்படியொரு துயரம் நிகழாமல் இருக்க அரசு, பொதுமக்கள், காவல்துறை, நிகழ்ச்சி நடத்துவோர் என அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும்.
ஒரு நிகழ்ச்சி நடந்தால், அதில் நாம் எப்படி ஒற்றுமையோடும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் என மக்கள் யோசிக்க வேண்டிய தருணம் இது.
உயிர்நீத்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். உயிர்நீத்தவர்களை நினைத்து நினைத்து நம் மனம் தவிக்கத்தான் முடியும். இனி இப்படி நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை" இவ்வாறு தெரிவித்துள்ளார்.