முதல் மனைவியை விவாகரத்து செய்தது ஏன்? விஷ்ணு விஷால் உருக்கம்

திருமணத்திற்கு 1 மாதம் முன்தான் முதல் மனைவிக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்ததாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.;

Update:2025-07-11 01:55 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து இவர், குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் ஓ மாம்பழ சீசனில், ஆர்யன் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால், கடந்த 2010-ம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை, விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. பாலிவுட் நடிகர் அமீர்கான் அந்த குழந்தைக்கு 'மிரா' என பெயர் சூட்டியுள்ளார். மிரா என்பதற்கு அளவுகடந்த அன்பு மற்றும் அமைதி என்று பொருள் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் முதல் மனைவியை விவாகரத்து செய்தது குறித்து விஷ்ணு விஷால் மனம் திறந்துள்ளார். அவர் கூறும்போது, "நானும், ரஜினியும் 4 ஆண்டுகள் காதலுக்கு பின்னரே திருமணம் செய்து கொண்டோம். திருமணத்துக்கு ஒரு மாதம் முன்பு தான் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. ஆனாலும் கடைசிவரை ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவரை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அதே காலகட்டத்தில் நான் படங்களில் அதிகம் கவனம் செலுத்தினேன். அதனால் எனக்கு அவர் மீது அக்கறை இல்லை என நினைத்துக்கொண்டார். சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வந்தது. விவாகரத்து முடிவை அவர் தான் எடுத்தார், நான் அல்ல" என்று விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்