"அந்த 7 நாட்கள்" திரைப்பட விமர்சனம்

எம்.சுந்தர் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான "அந்த 7 நாட்கள்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-09-26 06:46 IST

சென்னை,

மரணத்தின் பிடியில் இருந்து காதலியைக் காப்பாற்ற போராடும் காதலனின் கதை.

வானியல் ஆராய்ச்சி மாணவரான அஜிதேஜ், 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அதிசய சூரிய கிரகணத்தைப் பார்க்கிறார். அப்போது அதிசய சக்தி அவருக்கு கிடைக்கிறது. ஒருவரது கண்களை பார்த்தாலே அவர் எப்போது மரணம் அடையப் போகிறார்? என்பதை தெரிந்துகொள்கிறார்.

இதற்கிடையே தனது காதலி ஸ்ரீஸ்வேதாவின் கண்களை பார்க்கும் அஜிதேஜூக்கு, அவர் இன்னும் 7 நாட்களில் மரணமடைய போகிறார் என்பது தெரிகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? மரணத்தின் பிடியில் இருந்து தனது காதலியை அஜிதேஜ் காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே மீதி கதை.

அஜிதேஜின் அலட்டல் இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. காதலியின் உயிரைக் காப்பாற்ற போராடும் இடங்களில் துடித்துப் போயிருக்கிறார். கவர்ந்திழுக்கும் நடிகையாக இல்லாவிட்டாலும், நடிப்பால் கவனம் ஈர்க்கும் நடிகையாக அசத்துகிறார், ஸ்ரீ ஸ்வேதா. இறுதி காட்சிகளில் கலங்கடிக்கிறார். அமைச்சராக வரும் கே.பாக்யராஜின் அனுபவ நடிப்பு ரசிக்க வைக்கிறது. நமோ நாராயணன், தலைவாசல் விஜய், சுபாஷினி கண்ணன், செம்புலி ஜெகன், வாசு ஸ்ரீனிவாசன், சாய் கோபி, ராகவன் ஆகியோரின் நடிப்பிலும் குறையில்லை.

கோபிநாத் துரையின் ஒளிப்பதிவில் நேர்த்தி. சச்சின் சுந்தரின் இசையில் இன்னும் தேவை கீர்த்தி. சுவாரசியமான, புதுமையான கதைக்களம் பலம் என்றாலும், திரைக்கதையில் கவனம் செலுத்த தவறியது ஏனோ? முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் ‘மிஸ்ஸிங்'. பல காட்சிகளை யூகிக்க முடிவது பலவீனம்.

ஒரே மாதிரியான படங்களுக்கு மத்தியில், புதுமையான விஷயத்தை கொடுக்க நினைத்த வகையில் இயக்குனர் எம்.சுந்தரை பாராட்டலாம்.

அந்த 7 நாட்கள் - இன்னும் பயிற்சி வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்