ஷேன் நிகம், சாந்தனு நடித்த “பல்டி” படம் எப்படி இருக்கிறது? - சினிமா விமர்சனம்

உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம், சாந்தனு நடித்துள்ள ‘பல்டி’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-09-27 17:53 IST

ஷேன் நிகமும், சாந்தனுவும் நண்பர்கள். வேலையை தாண்டி, நண்பர்களுடன் இணைந்து ‘பஞ்சமி ரைடர்ஸ்’ அணிக்காக கபடி ஆடுகிறார். கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் செல்வராகவன் ‘பொற்றாமரை’ என்ற அணியை நடத்தி வருகிறார். ஒரு போட்டியில் செல்வராகவன் அணியை ஷேன் நிகம், சாந்தனு அணியினர் தோற்கடித்து விடுகிறார்கள். இதையடுத்து ஷேன் நிகம், சாந்தனுவை பெரிய தொகை கொடுத்து தனது அணிக்காக விளையாட அழைப்பு விடுக்கிறார் செல்வராகவன். பணத்தேவைக்காக செல்வராகவனுடன் கைகோர்க்கும் இருவரும் பகைகளையும், பிரச்சினைகளையும் சம்பாதிக்கிறார்கள். ஷேன் நிகம், சாந்தனு வாழ்க்கை எப்படியெல்லாம் தடம் மாறி செல்கிறது? என்னென்ன விளைவுகளை சந்தித்தனர்? என்பதே அதிரடி கலந்த கதை. 

அலட்டலும், ஆர்ப்பாட்டமும் இல்லாத நடிப்பால் கவரும் ஷேன் நிகம், சென்டிமெண்டிலும் ஸ்கோர் செய்துள்ளார். சாந்தனுவின் எதார்த்த நடிப்பு கவனம் ஈர்க்கிறது. சந்தர்ப்ப சூழலில் சிக்கும் எதார்த்தவாதியாக கலக்குகிறார்.

குறைவான காட்சிகளே வந்தாலும் பிரீத்தி அஸ்ரானி 'ஜாலக்காரி'யாக மிளிர்கிறார். கலகலப்பும், வெறித்தனமும் கலந்த வில்லத்தனத்தில் செல்வராகவன் புதுமை சேர்த்துள்ளார். அல்போன்ஸ் புத்திரன், பூர்ணிமா இந்திரஜித் என நடித்த அத்தனை பேரும் கொடுத்த கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.


ஒளிப்பதிவில் வித்தை காட்டியுள்ளார், அலெக்ஸ் ஜெ.புலிக்கல். சாய் அபயங்கரின் இசையில் புத்துணர்ச்சி தெரிகிறது. பாடல்களும் ஓகே ரகம்.அதிரடி - ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் பலம். அடர்த்தியில்லா காட்சிகளால் முதல் பாதியில் தடுமாற்றம். கபடி அணிகளுக்குள் இருக்கும் மோதலை அழுத்தமாக சொல்லியிருக்கலாம். 'லாஜிக்' மீறல் காட்சிகள் பலவீனம்.


பொழுதுபோக்கு களத்தில் பரபரப்பான காட்சிகளை கொண்டு கேங்ஸ்டர் கதையை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், உன்னி சிவலிங்கம்.

பல்டி - மேடு பள்ள பயணம். 

Tags:    

மேலும் செய்திகள்