நட்டி நடித்த "ரைட்" படம் எப்படி இருக்கிறது?- சினிமா விமர்சனம்

சுப்பிரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடித்துள்ள ரைட் படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-09-27 06:16 IST

சென்னை,

போலீஸ் நிலையத்துக்கே வரும் பிரச்சினை தான் கதை.

போலீஸ் இன்ஸ்பெக்டரான நட்டி நட்ராஜ், பிரதமர் பாதுகாப்புக்காக குழுவுடன் சென்றுவிடுகிறார். இதற்கிடையில் ஒரு ‘லேப்டாப்' மூலமாக அந்த போலீஸ் நிலையத்தை மர்ம ஆசாமி ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான்.

போலீஸ் நிலையத்தை சுற்றி வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், உள்ளே இருப்பவர்கள் வெளியே சென்றால் வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறான். உயிருடன் அனைவரும் தப்ப சில நிபந்தனைகளையும் விதிக்கிறான். அந்த நிபந்தனைகள் என்ன? அந்த மர்ம ஆசாமி யார்? எதற்காக இந்த முயற்சி? என்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடையாக மீதி கதை.

கதாநாயகன் நட்டி, சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டி செல்வது புதுமை. ஆனாலும், நடித்த காட்சிகளில் நியாயம் சேர்த்து தப்பித்துவிட்டார். சூழ்நிலை கைதியாக நடித்திருக்கும் அக்‌ஷரா ரெட்டி ‘அளவாக' நடித்துள்ளார். எதிர்பார்த்து வந்தோருக்கு ‘அல்வா' கொடுத்துவிட்டார்.

ஒருபக்கம் கோபம், இன்னொரு பக்கம் பயம் என இருதலை கொல்லி எறும்பாக கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்துள்ளார், அருண்பாண்டியன். அனுபவம் பேசுகிறது. மூணாறு ரவி, வினோதினி, ஆதித்யா சிவகுமார், தங்கதுரை, யுவினா என அனைவருமே நடிப்பில் கலக்கி இருக்கிறார்கள்.

எம்.பத்மேசின் ஒளிப்பதிவும், குணா பாலசுப்பிரமணியத்தின் இசையும் முடிந்தவரை படத்துக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறது. புதுமையான கதைக்களம் படத்துக்கு பலம். திரைக்கதையில் தடுமாற்றம் தெரிகிறது. எளிதில் யூகிக்க முடியும் காட்சிகள் பலவீனம். மூணாறு ரமேசும், தங்கதுரையும் பேசிக்கொண்டே இருக்கும் காட்சிகள் ரசிகர்களின் பொறுமைக்கு சவால்.

யூகங்களை மறந்து படத்துடன் பயணிக்கும் வகையில் திருப்பங்கள் கொண்ட காட்சிகளாக படத்தை இயக்கியுள்ளார், சுப்பிரமணியன் ரமேஷ்குமார்.

ரைட் - பாத்து போங்க...

 

Tags:    

மேலும் செய்திகள்