''சாதியால் மகளின் காதலுக்குத் தடைபோடும் தாய்'': ''காயல்'' - சினிமா விமர்சனம்
இன்றைய சமூகத்துக்குத் தேவையான கதையை, வெறும் பாடமாக மட்டும் கொடுக்காமல், ரசிக்கும்படியான படமாகவும் கொடுத்து திரும்பி பார்க்க வைத்திருக்கிறார், இயக்குனர் தமயந்தி.;
சென்னை,
சாதியைக் காரணம் காட்டி, தன் மகளின் காதலுக்குத் தடைபோடும் ஓர் அம்மாவின் வறட்டு பிடிவாத கதை.
லிங்கேசும், காயத்ரியும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இந்த காதலுக்கு காயத்ரியின் அப்பா ஐசக் சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால், லிங்கேசின் சாதியை காரணம் காட்டி காதலை ஏற்க மறுக்கிறார், காயத்ரியின் தாய் அனுமோல்.
பல கட்டமாக போராடி பார்த்தும் மனம் இறங்காத அனுமோல், தனது உறவினர் மகனுக்கு காயத்ரியை கட்டிக்கொடுக்கிறார். விரக்தியில் காயத்ரி தற்கொலை செய்துகொள்கிறார்.
மகளின் சாவுக்கு மனைவி தான் காரணம் என்று அனுமோலை வெறுக்கிறார் ஐசக். இதனால் அனுமோ மனநலம் பாதிக்கப்படுகிறார்.
இன்னொருபுறம் காதல் தோல்வியில் துவண்டு கிடக்கும் லிங்கேசை தேற்றும் இன்னொரு காதலியாக ஸ்வாகதா வருகிறார். அவரை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றியும் வருகிறார்.
ஒருகட்டத்தில் லிங்கேசை, ஐசக் - அனுமோல் தம்பதி சந்திக்க திருப்பம் ஏற்படுகிறது. அது என்ன? என்பதே கதை.
துடிப்பான இளைஞராக வரும் லிங்கேஷ், கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்துள்ளார். காதல் தோல்வியை மறைக்க போராடும் காட்சிகளிலும், இன்னொரு காதலை ஏற்கும் சூழலில் தயக்கத்திலும் கைதேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாபாத்திரமாக மாறி அனுமோல் கச்சிதமாக நடித்துள்ளார். மகளின் இறப்பில் அழுது புலம்பும் காட்சிகளில் பரிதாபம் அள்ளுகிறார்.
ஸ்வாகதாவின் துள்ளலான நடிப்பு ரசிக்க வைக்கிறது. காயத்ரியின் நடிப்பிலும் குறைவில்லை. ரமேஷ் திலக், ஐசக் என அனைவருமே கொடுத்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கார்த்தியும், இசையமைப்பாளர் ஜஸ்டினும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக படத்துக்கு பலமாய், பாலமாய் இருக்கிறார்கள்.
சமூக பிரச்சினைகளையும், சாதி கொடுமைகளை சுட்டி காட்டியிருப்பதை பாராட்டலாம். ஆனால் திரைக்கதையில் இன்னும் அழுத்தம் தேவை.
இன்றைய சமூகத்துக்குத் தேவையான கதையை, வெறும் பாடமாக மட்டும் கொடுக்காமல், ரசிக்கும்படியான படமாகவும் கொடுத்து திரும்பி பார்க்க வைத்திருக்கிறார், இயக்குனர் தமயந்தி.
காயல் - ரசிக்கும் தூறல்.