"பனை" சினிமா விமர்சனம்
இயக்குனர் ராஜேந்திரன் இயக்கிய "பனை" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;
சென்னை,
கருப்பட்டிக்கு பெயர் பெற்ற உடன்குடியை மையமாக கொண்ட கதை.
உடன்குடியில் பனை மர உரிமையாளர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராஜேந்திரன், தன் அனுமதியில்லாமல் பதநீரை காய்ச்சி கருப்பட்டியாக்கி விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவு போடுகிறார். வியாபாரிகளும் இந்த அராஜகங்களை பொறுத்துக்கொண்டு காலத்தை கடத்துகிறார்கள்.
இதற்கிடையில் ஹரிஷ் பிரபாகரன் தனக்கு சொந்தமான பனை மரங்களிலிருந்து பதநீர் இறக்கி, கருப்பட்டி தாயாரித்து விற்பனை செய்கிறார். தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்து வேகமாக வளருகிறார். ஹரிஷ் பிரபாகரனின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத ராஜேந்திரன், பல்வேறு சதி வேலைகளை திட்டமிடுகிறார். அதை ஹரிஷ் பிரபாகரன் சமாளித்தாரா, இல்லையா? என்பதே மீதி கதை.
பக்கத்து வீட்டு பையன் போல் எதார்த்தமான நடிப்பால் அசத்துகிறார், ஹரிஷ் பிரபாகரன். ‘எமோஷனல்' காட்சிகளில் கவனம் வேண்டும். ஹீரோவை காதலிக்கும் (வழக்கமான கதாநாயகிகளின்) வேலையைக் கச்சிதமாக செய்துள்ளார் மேக்னா.
அராஜக நடிப்பால் கதாபாத்திரத்துக்கு கம்பீரம் சேர்த்துள்ளார், தங்கவேல். வடிவுக்கரசியின் அனுபவ நடிப்பு படத்துக்கு அழகு. அனுபமா குமார், ரேஷ்மா, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு ஆகியோரின் நடிப்பிலும் குறைவில்லை.
சிவக்குமார் ரங்கசாமியின் ஒளிப்பதிவும், மீரா லால் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன. வைரமுத்துவின் வரிகளில் பாடல்களின் கருத்தாழம் தெரிகிறது. ‘பனைமரம்... பனைமரம்...' பாடல் மனதில் தங்கும். எதார்த்த காட்சிகள் படத்துக்கு பலம். திரைக்கதையில் வேகம் இல்லை. ஊரில் நடக்கும் அக்கிரமங்களை போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பது நெருடல். நாடகத்தனம் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது.
பனைகளின் பெருமைகளின் வழியாக, சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் சாட்டையடி கொடுத்திருக்கிறார், இயக்குனர் ராஜேந்திரன்.
பனை - சுண்ணாம்பு சேர்க்க வேண்டாமே...