அதிசயிக்க வைத்த ருக்மிணி...’காந்தாரா- சாப்டர் 1’ - திரை விமர்சனம்

ஒட்டுமொத்த படத்தையும் தோளில் சுமந்து வியக்க வைத்துள்ளார், ரிஷப் ஷெட்டி.;

Update:2025-10-03 14:14 IST

சென்னை,

2022-ம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் முந்தைய காலகட்டத்தை உணர்த்தும் கதை.

மூலிகைகள் மற்றும் விலையுர்ந்த விளைபொருட்கள் விளையும் காந்தாரா வனப்பகுதியை கைப்பற்ற, அதன் அருகே இருக்கும் நாட்டின் அரசர் முயற்சிக்கிறார். அப்போது தெய்வ சக்தி அவரை வதம் செய்துவிடுகிறது. ஆனாலும் அந்த அரசரின் வாரிசான ஜெயராம் அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில் காந்தாரா பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரிஷப் ஷெட்டி, காட்டை விட்டு வெளியேறி தங்களிடம் உள்ள விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கிறார். அத்துடன் தங்களுக்கு போடப்பட்டிருந்த தடைகளை உடைத்து, துறைமுகத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.

ரிஷப் ஷெட்டி மற்றும் அவருடைய மக்களை எதிர்க்க முடியாமல் தடுமாறும் ஜெயராம், அவர்களுடன் சமரசம் பேசுகிறார். உறவாடி கெடுத்து காந்தாராவை கைப்பற்ற சதிவேலைகளை செய்கிறார்.

ஜெயராமின் சதித்திட்டங்களை ரிஷப் ஷெட்டியால் முறியடிக்க முடிந்ததா? அடுத்து என்ன ஆனது? என்பதே பரபரப்பான மீதி கதை.

ஒட்டுமொத்த படத்தையும் தோளில் சுமந்து வியக்க வைத்துள்ளார், ரிஷப் ஷெட்டி. உடலில் தெய்வ சக்தி நுழைந்து சாமியாடும் இடங்களில் சிலிர்ப்பூட்டுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் புரிந்துள்ளார்.

முதல் பாதியில் பூ மாதிரி வரும் இளவரசி ருக்மினி வசந்த், பிற்பாதியில் புயலாக மாறி ஆக்ரோஷம் காட்டி அதிசயிக்க வைக்கிறார்.

ஜெயராமின் நடிப்பு மிரட்டல். மலைவாழ் மக்களின் தலைவனாக வரும் சம்பத்ராம் நடிப்பும் அசத்தல். குல்ஷன் தேவைய்யா, பிரமோத் ஷெட்டி, நவீன் பாதில் என அனைவருமே கவனம் ஈர்க்கிறார்கள்.

அரவிந்த் காஷ்யப்பின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமிப்பு. அஜனீஷ் லோக்நாத்தின் இசை படத்துக்கு உயிரோட்டம்.

நடிகர்-நடிகைகளின் உயிரோட்டமான நடிப்பும், மிரட்டல் தரும் கிராபிக்ஸ் காட்சிகளும் பலம். முதல் பாகத்தை போலவே கதைக்களம் நகருகிறது. சில காட்சிகளை யூகிக்க முடிவதும் பலவீனமாக அமைகிறது.

தேவாங்குகள், புலிகள் வரும் காட்சி, குகையில் நடக்கும் அதிசயம், தெய்வசக்தி கொண்ட ஈஸ்வர தோட்டம் என பிரமாண்டத்தின் உச்சங்களாய் காட்சிகளை நகர்த்தி இயக்குனராக மீண்டும் வியக்க வைத்துள்ளார், ரிஷப் ஷெட்டி.

காந்தாரா - ஓ........

Tags:    

மேலும் செய்திகள்