கலைப் படைப்புகள் ஆகும் கழிவுப் பொருட்கள் - வர்ஷினி

நமது சுற்றுச்சூழலைப் பற்றி புரிய வேண்டும் என்றால், முதலில் அதை நாம் உற்று கவனிக்க வேண்டும். சுற்றிலும் கழிவுப்பொருட்கள் இருப்பதால், இயற்கை எவ்வாறு மாசு அடைகிறது என்பதை, கவனித்தால் மட்டுமே நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

Update: 2023-03-12 01:30 GMT

"இயற்கையை எந்த விதத்திலும் கழிவுப் பொருட்களால் கறைப்படுத்தக்கூடாது" என்கிறார் வர்ஷினி. பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள், சாக்லேட் கவர், காகிதம் என எல்லா வகையான கழிவுப் பொருட்களையும், அழகிய கலைப் பொருட்களாகவும், அன்றாட வாழ்வில் உபயோகிக்க தகுந்த பொருட்களாகவும் மாற்றி விடுகிறார். இதற்காகவே ஒரு நிறுவனத்தையும் நடத்துவதோடு இது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். அவரது பேட்டி.

"கோயம்புத்தூரில் படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் பணிபுரிந்தேன். எனது குடும்பத்தினர் அனைவரும் தொழில் செய்து வந்தனர். அதனால் இயல்பாகவே எனக்கும் தொழில் செய்யும் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதேசமயம் எனது தொழில் லாப நோக்கத்திற்காக மட்டுமில்லாமல், மற்றவர்களுக்கும், நான் நேசிக்கும் இயற்கைக்கும் எந்த விதத்திலாவது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதன் விளைவாகத்தான் எனது நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

சிறு வயதில் இருந்தே எனக்கு இயற்கையோடு இணைந்திருப்பது பிடிக்கும். அடிக்கடி கடற்கரைக்குச் செல்லுதல், மலையேற்றம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபடுவேன். அது எனக்கு மன அமைதியைத் தந்தது. நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். பெரும்பாலான நடுத்தரக் குடும்பத்தில் வசிப்பவர்கள், எந்த ஒரு பொருளையும் அவ்வளவு சீக்கிரமாக தூக்கி எறிய மாட்டார்கள். முழுமையாக பயன்படுத்துவார்கள்.

இதற்கு சிறந்த உதாரணம் எனது அம்மா ரேவதி. காய்கறிகளின் தோலைக்கூட தூக்கி எறியாமல், சுவையான துவையலாக தயாரித்துக் கொடுப்பார். 'எந்த உணவையும் வீணாக்கக்கூடாது' என்பதை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். 'மற்றவர் நலன் மீதும் அக்கறை கொள்ள வேண்டும்' என்று என்னுடைய அப்பா பாபு, எனக்குள் விதைத்த எண்ணமும், எனது நண்பரின் தந்தை அளித்த ஊக்கமும்தான், தைரியத்தோடு இத்தகைய செயலில் என்னை ஈடுபட செய்தது.

'கலையை நேசிக்க தெரிந்தவர்களால், இயற்கையையும் நேசிக்க முடியும்' என்பது என் கருத்து.

எனது நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்களிடம் சேர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கமல்ல. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சென்று அவர்களிடம் இயற்கையின் முக்கியத்துவத்தை விளக்குகிறோம். குறைந்த கழிவு உள்ள பொருட்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? பொருட்களை வாங்கும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? என்பதையெல்லாம் கற்றுத் தருகிறேன்.

நமது சுற்றுச்சூழலைப் பற்றி புரிய வேண்டும் என்றால், முதலில் அதை நாம் உற்று கவனிக்க வேண்டும். சுற்றிலும் கழிவுப்பொருட்கள் இருப்பதால், இயற்கை எவ்வாறு மாசு அடைகிறது என்பதை, கவனித்தால் மட்டுமே நம்மால் புரிந்துகொள்ள முடியும். இதற்கு முதலில் நமது மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கான பயிற்சியையும் அளிக்கிறேன்.

நாம் ஓரளவு பயன்படுத்தி தூக்கி எறியும் பொருட்கள்தான், பெரும்பாலும் எனது நிறுவனத்தின் மூலப் பொருட்களாக இருக்கும். சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்குப் பயிற்சியளித்து, அந்தப் பொருட்களை உபயோகமானவையாக மாற்றி வாடிக்கையாளர்களிடம் சேர்க்கிறேன். ஒரு பொருளை முழுமையாக அதன் வாழ்நாள் முடியும் வரை பயன்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்.

சமூகத்தில் நீங்கள் மாற்ற விரும்புவது என்ன?

முன்பெல்லாம், ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னர் பலமுறை யோசிப்போம். அது உபயோகமானதா? எந்த அளவுக்கு அதை பயன்படுத்த முடியும்? என சிந்தித்து முடிவெடுப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில், ஒரு பொருள் அழகாக இருந்தாலே அதை வாங்க வேண்டும் என்ற மனநிலை பலரிடம் இருக்கிறது. தள்ளுபடி விற்பனை மற்றும் இதர பலன்களுக்கு ஆசைப்பட்டு, தன்னை மற்றவர்களிடம் எப்பொழுதும் 'அப்டேட்' ஆனவராக காட்டிக்கொள்வதற்காக தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கழிவுப் பொருட்களும் பெருகிவிட்டன. பிளாஸ்டிக் நுகர்வு அதிகரித்துள்ளது.

உதாரணமாக, அப்போதெல்லாம் வெளியில் செல்லும்போது வீட்டில் இருந்தே, பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் சென்றோம். ஆனால் இப்போது கடைகளில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் வாங்கி பயன்படுத்திவிட்டு காலி பாட்டிலை தூக்கி எறிகிறோம். இதுவும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும். இந்த நிலை மாற வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்திய கலாசாரத்தில், விருந்தினர் தாமாகவே சென்று உணவு எடுத்துக்கொள்ளும் 'பப்பெட்' முறை பொருந்தாதது என்பது என்னுடைய கருத்து. இந்த முறையில் உணவு அதிகமாக வீணாக்கப்படுகிறது. எனவே நமது பாரம்பரிய முறையான வாழை இலை விருந்தையும், மண் குவளை அல்லது செம்பில் தண்ணீர் வைக்கும் முறையையும் பின்பற்றினால் உணவு கழிவுகள் பெருமளவு குறையும்.

உங்கள் எதிர்கால இலக்கு என்ன?

அடுத்தத் தலைமுறை ஆரோக்கியமான உடல் நலமும், மனநலமும் பெற்று வாழ வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்த பூமி, மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. ஆகையால் எல்லா உயிர்களுக்கும் சமநிலை வழங்கப்படுவது அவசியம். கழிவுப் பொருட்கள் இல்லாத, ஆரோக்கியமான சுற்றுச் சூழலை உருவாக்க வேண்டியது நமது கடமை. இதை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதையே எனது நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்