அகத்தியர் வழிபட்ட இலஞ்சி குமாரசுவாமி

இலஞ்சி முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் மாதுளை முத்துகளால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.;

Update:2025-09-24 20:17 IST

தென்காசி மாவட்டத்தில் இயற்கை எழில் நிறைந்த இலஞ்சி எனும் ஊரில் அமைந்துள்ளது, இலஞ்சி குமாரர் திருக்கோவில். இத்தலத்தில் உள்ள சிவபெருமான், 'இருவாலுக நாதர்' என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். அன்னை இருவாலுக ஈசர்க்கினியாள் ஆவார். இங்கு எழுந்தருளி உள்ள முருகப்பெருமான், திருஇலஞ்சி குமாரர் என்ற திருநாமத்துடன் அற்புதமாக காட்சி தருகிறார்.

தல புராணம்

ஒரு சமயம் திரிகூடாசல மலையின் அடிவாரத்தில் கபில முனிவர், துர்வாச முனிவர், காசிப முனிவர் ஆகிய மூவரும் சந்தித்து கொண்டனர். அவர்கள் பல்வேறு விதமான ஆன்மிக கருத்துக்களை பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு, “உலகின் உண்மைப்பொருள் யார்?” என்ற கேள்வி உண்டானது. அதற்கு காசிப முனிவர், படைக்கும் கடவுளான பிரம்மனே என்றார். துர்வாச முனிவரோ காக்கும் கடவுளான திருமாலே என்றார். அதனை மறுத்த கபில முனிவரோ, அழிக்கும் கடவுளான சிவனே என்றார்.

அவர்களின் மாறுபட்ட கருத்துகளால் அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அப்போது துர்வாச முனிவர், உண்மை விளங்கிட தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை வணங்கி வேண்டினார். அவரின் வேண்டுகோளை ஏற்ற முருகப்பெருமான், ஒரு முகமும், நான்கு கரங்களும், பொன் மேனியும் கொண்ட கோலத்தில் தோன்றினார். பின்பு பிரம்மா, திருமால், ருத்திரன் ஆகியோர் இணைந்த மும்மூர்த்தி வடிவில் காட்சியருளி, “யாமே விதியாக நின்று படைப்போம், அரியாக நின்று காப்போம், சிவனாக நின்று அழிப்போம். யாமே உண்மைப்பொருள்" என்பதை தெளிவுப்படுத்தினார்.

அந்த தரிசனத்தை கண்ட முனிவர்கள், தங்களின் குழப்பம் நீங்கி முருகப்பெருமானை வணங்கி நின்றனர். மேலும் முனிவர்கள், தங்களுக்கு காட்சியளித்தது போலவே இத்தலத்தில் எழுந்தருளி இங்கு வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தந்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டனர். அதற்கு இணங்க, முருகப்பெருமான் இங்கு வரதராஜ குமாரனாக அருள்பாலிப்பதாக இலஞ்சி தல புராணம் கூறுகிறது.

கைலாயத்தில் சிவபெருமான்-பார்வதி திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் என அனைத்து பகுதியில் உள்ளவர்களும் வடதிசையில் வந்து குவிந்தனர். இதனால் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்தது. இதைச் சரிசெய்ய சிவபெருமான், அகத்திய முனிவரை தென் திசை நோக்கி செல்ல பணித்தார். அப்போது, "சிவன் பார்வதி திருமணத்தை தன்னால் காண முடியாதோ” என்று வருந்தினார், அகத்திய முனிவர்.

இதை அறிந்த சிவபெருமான், "தெற்கு பொதிகை மலையில் திருமணக் கோலத்தில் காட்சி அளிப்பதாக" அருளினார். இதையடுத்து சிவனின் கட்டளையை சிரமேற்கொண்ட அகத்திய முனிவர், தென்திசை நோக்கி புறப்பட்டார். பொதிகை மலையில் திருக்குற்றாலம் எனும் தலத்திற்கு வரும்போது, அங்குள்ள பெருமாள் கோவிலுக்குள் நுழைய முயன்றார். அப்போது அங்கிருந்த வைணவர்கள், அகத்தியர் சைவர் என்பதால் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.

இதனால் மனம் வருந்திய அகத்திய முனிவர் அவ்வழியாக திருஇலஞ்சி தலத்திற்கு வந்தார். அங்கு, சிவபெருமானை தரிசிக்கும் வாய்ப்பு அருளும்படி குமாரரை வேண்டினார். முருகப்பெருமானும் காட்சி அளித்து அருள் புரிந்தார். இதையடுத்து சித்ரா நதிக்கரை வெண்மணலை கொண்டு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்தார்.

வெண்மணலுக்கு தேவநாகரியில் இருவாலுகம்' என்ற பெயர் உண்டு. அதனால் அகத்தியர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்துக்கு 'இருவாலுக ஈசர்' என்ற பெயர் ஏற்பட்டது. குற்றாலம் சென்ற அகத்திய முனிவர், வைணவர் வேடமிட்டு பெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கிருந்த விஷ்ணுவை வணங்கிவிட்டு, அவரது தலையில் கைவைத்து அவரை சிவலிங்கமாக மாற்றி அருளியதாக தல புராணம் கூறுகிறது.

கோவில் அமைப்பு

இலங்சி குமாரர் கோவிலில் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இரண்டு வாசல்கள் உள்ளன. கிழக்கு வாசல் வழியே உள்ளே நுழைந்தால், அழகிய நந்தவனம் நம்மை வரவேற்கும். நந்தவனத்தை அடுத்து, சரவண மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தை தாண்டி சென்றதும் உள் வாசலின் தென்புறத்தில் தல விநாயகர் காட்சி அளிக்கிறார். கருவறையில் கிழக்கு நோக்கியபடி இருவாலுக நாயகர் லிங்க திருமேனியில் அருள்பாலிக்கிறார். கருவறையின் எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் இருவாலுக நாயகருக்குரிய உற்சவ சோமாஸ்கந்தர் மற்றும் அம்பாள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். அதே மண்டபத்தில் இத்தல அன்னை இருவாலுக ஈசர்க்கினியாள் தெற்கு நோக்கியவாறு அருள்புரிகிறார்.

இருவாலுக நாயகர் சன்னிதிக்கு தெற்கே தனிச் சன்னிதியில் இத்தல நாயகனான திருஇலஞ்சி குமாரசுவாமி காட்சி தருகிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி - தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதிக்கு எதிரே மயில், கொடிமரம், பலிபீடம் ஆகியவை இருக்கின்றன. பிரகாரங்களில் பரிவார மூர்த்திகளாக அதிகார நந்தி, சூரியன், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், கன்னிமூல கணபதி, உற்சவர் திரு இலஞ்சி குமாரர், காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, திருக்குற்றாலநாதர் குழல்வாய்மொழி அன்னை, அகத்தியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், நடராஜர், பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. மேலும் இங்குள்ள நந்தவனத்தில் நாகலிங்க மரம், வில்வ மரம் போன்ற எண்ணற்ற மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. தல தீர்த்தமாக சித்ரா நதி உள்ளது.

வழிபாடு

சித்திரை மாதத்தில் கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் இலஞ்சி குமாரரும், இருவாலுக நாயகரும் எழுந்தருள்வர். ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பத்தாம் நாள் தீர்த்தவாரியும் வெகுவிமரிசையாக நடைபெறும். வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி, தைப்பூசம், மாசிமகம் போன்ற விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

ஆலயத்தில் தினமும் திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த சாமம் ஆகிய ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் சிறப்படைய, குடும்பத்தில் ஐஸ்வரியம் பெருக இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைத்த பக்தர்கள், தங்கள் குழந்தையை தத்துக்கொடுத்து, வாங்கி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள் செலுத்துகிறார்கள்.

இங்குள்ள முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் மாதுளை முத்துகளால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

கோவில், காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

தென்காசியில் இருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் இலஞ்சி எனும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்