திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவில்

இந்திரன் வழிபாடு செய்து தன் பாவங்களை போக்கிய தலம் என்ற சிறப்பை திருவாஞ்சியம் திருத்தலம் பெற்றுள்ளது.;

Update:2025-09-23 17:33 IST

திருவாரூர் மாவட்டம் திருவாஞ்சியம் என்ற ஊரில் அமைந்துள்ளது வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில். தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரை தலங்களில், இது 70-வது தலமாகும். இத்தல இறைவன் வாஞ்சி நாதர், இறைவி மங்களநாயகி.

தல சிறப்புகள்

இத்தலத்தில் திருமால் சிவனை வழிபட்டு, ஸ்ரீயை வாஞ்சித்து (மகாலட்சுமியை அடைய விரும்பி) தவம் இயற்றியதால், இத்தலம் 'திருவாஞ்சியம்' என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. துவாபரயுகத்தில், தெரியாமல் செய்த தவறுக்காக மூன்று யுகம் அரக்கனாக வாழும் தண்டனை பெற்றவன், விரதனு. இவன் பராசர முனிவரை வணங்கி வேண்ட, அவர் திருவாஞ்சியம் வந்து இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தை தெளித்து சாபவிமோசனம் அளித்தார்.

திரேதாயுகத்தில், அத்திரி முனிவர் குழந்தைப் பேறு இன்றி மிகவும் வருந்தினார். அவர், நாரதரின் உபதேசத்தின்படி இத்தலம் வந்து, ஆயிரம் ஆண்டுகள் இங்குள்ள குளத்தில் நீராடி சிவனை நோக்கி தவம் இயற்றினார். அதில் மனம் இரங்கிய சிவபெருமான், தத்தாத்ரேயனை மகனாக அருளினார்.

கவுதம முனிவரின் மனைவியான அகலிகை மீது இந்திரன் ஆசைப்பட்டான். ஒரு சமயம் கவுதம் முனிவர் ஆசிரமத்தில் இல்லாத வேளையில், கவுதம முனிவரின் உருவத்தில் வந்த இந்திரன் அகலிகையிடம் சென்றான். இதை, தன்னுடைய ஞான திருஷ்டியில் உணர்ந்த கவுதம முனிவர் ஆசிரமம் வந்தார். அப்போது பூனையாக உருமாறி மறைந்திருந்த இந்திரனுக்கு உடல் முழுவதும் கண்ணாக மாறும்படி சாபம் இட்டார். இதையடுத்து பூலோகத்தில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்தான், இந்திரன். அவ்வாறு வழிபாடு செய்து தன் பாவங்களை போக்கிய தலமாக இந்த திருவாஞ்சியம் உள்ளது.

ஆலய அமைப்பு

இந்த ஆலயத்தில் 110 அடி உயர ஐந்துநிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. அதன் வடக்கு பகுதியில் 'குப்த கங்கை' எனும் தீர்த்தம் உள்ளது. கங்கைக்கரை விநாயகரை அடுத்து, அக்னி மூலையில் எமதர்ம ராஜா, சித்திரகுப்தர் ஆகியோர் தென்திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.

இரண்டாம் கோபுர வாசலின் இடதுபுறத்தில் அபயங்கர விக்னேஸ்வரரும், வலப்புறத்தில் பால முருகனும் உள்ளனர். இரண்டாம் பிரகாரத்தில் இடதுபுறம் நட்டுவன் விநாயகரும், வலதுபுறம் மங்களாம்பிகை தாயாரும் காட்சி தருகின்றனர். கொடிமரம், பலிபீடம், நந்திகேஸ்வரர், மடப்பள்ளி, பள்ளியறை, அலங்கார மண்டபம் உள்ளன.

மூன்றாம் கோபுர வாசலில் இரட்டை விநாயகர், அதிகார நந்தி காட்சி தருகின்றனர். நர்த்தன மண்டபத்தில் ஒரு நந்தியும், மகா மண்டபத்தில் துவாரபாலகர்கள் அமையப்பெற்ற கருவறையும் உள்ளது. கருவறையில் இறைவன் வாஞ்சிநாதர் லிங்க சொரூபத்தில் அருள்பாலிக்கிறார்.

இடதுபுறம் நடராஜர் சன்னிதி உள்ளது. திருச்சுற்றில் தட்சிணா மூர்த்தி, சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. திருச்சுற்றின் பின்புறம் சந்திரமவுலீஸ்வரர், கன்னி விநாயகர், சட்டநாதர், மீனாட்சி, சுந்தரேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அதே வரிசையில் தேயலிங்கம், ஆகாய லிங்கம், திருவெண்காடு லிங்கம், திருவிடைமருதூர் லிங்கம், மயிலாடுதுறை லிங்கம், சாயாவனம் லிங்கம், ஷேத்ரலிங்கம் ஆகியவை உள்ளன. கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

விழாக்கள்

மார்கழி மாத திருவாதிரையன்று நடராஜர் வீதிஉலா, கார்த்திகை, நவராத்திரி, கந்தசஷ்டி, ஆடிப்பூரம் போன்றவை சிறப்பாக நடைபெறும். மாசிமகம் பிரமோற்சவத்தின் இரண்டாம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். அன்றைய தினம் வாஞ்சிநாதர் எமன் வாகனத்தில் உலா வருவார். இத்தலத்தில் உள்ள குப்த கங்கையில் நீராடி, வாஞ்சிநாதரையும் எமதர்மராஜனையும் வழிபட்டால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோவில், காலை 6 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.

அமைவிடம்

கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக சென்றால் அச்சுதமங்கலம் என்ற ஊர் வரும். அங்கிருந்து 2 கி.மீ. தெற்கே இந்த ஆலயம் அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்