சேவூர் ஸ்ரீவாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்: 29-ந்தேதி விழா ஆரம்பம்
டிசம்பர் 29-ந் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை தினசரி காலையில் நடராஜருக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.;
கொங்கு ஏழு ஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றக்கூடியதுமான சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 29-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு, கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்கி 8 நாட்கள் நடைபெற உள்ளது.
29-ந் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை தினசரி காலை 10 மணிக்கு நடராஜருக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஜனவரி 3 -ம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடராஜ பெருமான் உடனமர் சிவகாமியம்பாளுக்கு பல்வேறு திரவிய சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து காலை 9 மணிக்கு சிவபெருமானுக்கு உரிய ராக தாளங்கள் வாசிக்கப்பட்டு மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
முற்பகல் 11 மணிக்கு, நடராஜ பெருமான் உடனமர் சிவகாமியம்பாள் புஷ்ப அலங்காரத்தில், முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெறும்.
திருவிழாவை முன்னிட்டு 3 -ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெறும். இதைத்தொடர்ந்து ஜனவரி 5 -ம் தேதி காலை 10 மணிக்கு மஞ்சள் நீர் விழா, கொடி இறக்குதல் நிகழ்வுடன் ஆருத்ர தரிசன விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர், அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.