உவரி சுயம்புலிங்க சுவாமி மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது.. திரளான பக்தர்கள் தரிசனம்
மார்கழி மாதத்தையொட்டி கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.;
தமிழ்நாட்டில் உள்ள பழமையான சிவாலயங்களில் நெல்லை மாவட்டம் உவரி சுயம்பு லிங்கசுவாமி கோவிலும் ஒன்றாகும். வங்க கடலோரம் சுவாமி சுயம்புவாக தோன்றிய இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளியானது மூலவர் சுயம்பு லிங்கசுவாமி கோவில் மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
அதன்படி மார்கழி 2-ந் தேதியான இன்று அதிகாலையில் சூரிய உதயத்தை தொடர்ந்து காலை 6.35 மணிக்கு மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர் விழுந்தது. சுமார் 10 நிமிடம் வரை நீடித்த இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். சிவபெருமானை சூரியன் வழிபடுவதாக நெகிழ்சியுடன் தெரிவித்தனர்.
முன்னதாக மார்கழி மாதத்தையொட்டி கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி, சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை, பிரசாதம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலர் கடல் மண்ணை பெட்டியில் சுமந்து அதை கடற்கரையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.