அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் கோவிலில் 63ஆம் ஆண்டு திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் தினமும் காலை, மதியம் மற்றும் இரவு மேளதாளம் மற்றும் வில்லிசை நிகழ்ச்சியுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. சாலைப்புதூர், மகிழ்வண்ணநாதபுரம், பொட்டலூர், நவநீதகிருஷ்ணபுரம், பெத்தநாடார்பட்டி, நாகல்குளம் பகுதிகளுக்கு அம்மனின் சப்பரம் சென்று வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோவிலின் சார்பில் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நிறைவு நாளில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி (தீமிதி நிகழ்ச்சி) நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்குழி இறங்கும் நிகழ்வைக் காண சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்திருந்தனர்.