வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆவணி தேரோட்டம்
திருவிழா நாட்களில் தினமும் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;
வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி மாத தேரோட்ட திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்தாண்டு தேரோட்டத் திருவிழா கடந்த மாதம் 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடந்தது. பின்பு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜை நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
11 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பத்தாம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. சுவாமி தேரில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா.. கோபாலா..’ என்ற கோஷத்துடன் தேர் இழுத்து வழிபட்டனா. தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.
விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மீனா மாடசாமி, அறங்காவலர்கள், மண்டகபடிகாரர்கள் மற்றும் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.