பிரம்மோற்சவ விழா: நாட்டரசன்கோட்டை பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;
சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன் கோட்டையில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ பூமி நீலா அலர்மேல் மங்கை சமேத வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் பிரம்மோற்சவ விழா மிகச் சிறப்பு வாய்ந்தது. 11 நாட்கள் இவ்விழா நடைபெறும்.
அவ்வகையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 25-ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் பதினோராம் நாளான இன்று காலையில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சர்வ அலங்காரத்துடன் பெருமாள் தயாருடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பகவானை தரிசனம் செய்தனர்.