குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கோலாகலம்: நாளை சூரசம்ஹாரம்
அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.;
குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (வியாழக்கிழமை) இரவில் நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 8-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.இரவில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 9-ம் திருவிழாவான இன்று (புதன்கிழமை) இரவில் அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்ற பிறகு, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குலசேகரன்பட்டினம் கோவில் நிர்வாகம் மற்றும் ஊராட்சி சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தசரா திருவிழாவையொட்டி காப்புக்கட்டிய தசரா குழுவினர் காளி, முருகன், விநாயகர், சிவன், குறவன்-குறத்தி உள்பட பல்வேறு வேடமணிந்துதினமும் ஊர் ஊராக சென்று ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.மேலும் காணிக்கைகளை வசூலித்து கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். இதையொட்டி உடன்குடி, , சிவலூர், தாண்டவன்காடு, ஞானியார் குடியிருப்பு, உள்ளிட்ட பகுதிகளுக்கு தசராக்குழுவினர் சார்பில் மேளம், டிரம் செட், செண்டா மேளம், கரகாட்டம், ‘டிஸ்கோ டான்ஸ்’ போன்ற கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன.