கங்காசாகர் மேளா.. சாகர் தீவில் புனித நீராட குவியும் பக்தர்கள்
மகர சங்கராந்தி ஸ்னானம் செய்வதற்காக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிபார்க்கப்படுகிறது.;
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை போன்று வட மாநிலங்களில் மகர சங்கராந்தி விழா அந்தந்த மாநில பாரம்பரிய வழக்கப்படி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மேற்கு வங்காளத்தில் கங்கா சாகர் மேளா நடைபெறுகிறது.
கங்கை நதியானது வங்காள விரிகுடா கடலில் கலக்கும் முகத்துவாரமான சாகர் தீவில், மகர சங்கராந்தி பண்டிகையை ஒட்டி நடைபெறும் இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடுவார்கள். இது கும்பமேளாவுக்கு அடுத்தபடியாக நடைபெறும் மிகப்பெரிய மேளா ஆகும்.
அவ்வகையில் இந்த ஆண்டின் கங்காசாகர் மேளா கடந்த 10-ம் தேதி தொடங்கியது. தினமும் ஏராளமான மக்கள் கங்காசாகர் தீவுக்கு வருகை தந்து புனித நீராடுகின்றனர். இந்த மேளா 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான மகர சங்கராந்தி ஸ்னானம் நாளை (14.1.2026) நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராட உள்ளனர். கங்கா ஆரத்தி நிகழ்ச்சியும் இதில் முக்கியமானது.
புனித நீராடி, கங்கார ஆரத்தியை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிபார்க்கப்படுகிறது. எனவே, கங்காசாகர் தீவில் புனித நீராடும் இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சில இடங்களில் டிரோன்களும் பறக்கவிடப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். கங்காசாகர் மேளா நடைபெறுவதால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.