சபரிமலையில் நாளை மகர ஜோதி தரிசனம்.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் குவிந்துள்ள பக்தர்கள் மலையிலேயே ஆங்காங்கே முகாமிட்டு வருவதால், கூட்டம் அலைமோதுகிறது.;
மண்டல விளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் முடிந்து, டிசம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதி மாலை திறக்கப்பட்டு, பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மகரஜோதி தரிசனம்
முத்தாய்ப்பு நிகழ்வாக நாளை (ஜனவரி 14), மகரவிளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. இதற்காக நாளை பகல் 02.45 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு, 03.08 மணிக்கு மகர சங்கராந்தி பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரு மகேஷ் மோகன் மற்றும் மேல்சாந்தி இ.டி.பிரசாத் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் இந்த பூஜைகள் நடைபெற உள்ளது. பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணப் பெட்டி மாலை 06.15 மணியளவில் சன்னிதானத்தை வந்து அடையும். தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் உள்ளிட்டோர் திருவாபரணப் பெட்டியை வரவேற்று, ஏற்றுக் கொள்வார்கள்.
மாலை 06.40 மணிக்கு திருவாபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறும். தீபாராதனை நடைபெற்ற ஒரு சில நொடிகளிலேயே பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
மகர விளக்கையொட்டி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மலையிலேயே ஆங்காங்கே முகாமிட்டு வருவதால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே மகரவிளக்கு பூஜை நாளில் கூட்ட நெரிசலை தவிர்க்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அன்றைய தினம் காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து மகரஜோதி தரிசனத்துக்கு பின்னரே பக்தர்கள் 18-ம் படி வழியாக செல்லலாம்.
மகரவிளக்கு உற்சவத்தை முன்னிட்டு சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 45,000 ஆக இன்று குறைக்கப்பட்டுள்ளது. நாளை மேலும் குறைக்கப்பட்டு 30,000 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் போலீசார் அனுமதித்துள்ள இடங்களை தவிர மற்ற இடங்களில் பக்தர்கள் கூடாரம் அமைத்து ஓய்வு எடுத்து தங்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் அய்யப்ப பக்தர்கள் சமையல் செய்ய கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தக்கூடாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவாபரணப் பெட்டி வரும் பாதை
திருவாபரணப் பொட்டி ஊர்வலம் பாதுகாப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக ஜனவரி 14 அன்று திருவாபரணப் பெட்டி வரும் பாதையில் பக்தர்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மகரஜோதி தரிசனம் பார்க்க பெரிய பாதை வழியாக வரும் பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளுக்குள் உணவு சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மகரஜோதியை தரிசிக்க உயரமான மரங்களின் மீது ஏறுவது தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பம்பையில் இருந்தே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகாரிகள் அனுமதித்த இடங்களில் இருந்து மட்டுமே பக்தர்கள் மகரஜோதியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளுக்குள் சென்று மகரஜோதியை பார்க்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.