திருவீதி உலா.. சிறப்பு அபிஷேக ஆராதனை.. முருகன் கோவில்களில் களைகட்டிய கந்த சஷ்டி விழா

கந்த சஷ்டியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.;

Update:2025-10-22 16:47 IST

முருகப்பெருமான் சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்த நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரத்தை காண ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். மேலும் கந்த சஷ்டியையொட்டி பக்தர்கள் 7 நாட்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். சஷ்டி அன்று சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு, சப்தமி திதியில் நடைபெறும் முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசித்த பிறகு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டின் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், விஷேக பூஜைகள் மற்றும் திருவீதி உலா என விழா களைகட்டி உள்ளது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

விராலிமலை

புதுக்கோட்டை மாவட்ட விராலிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று காலை கணபதி ஹோமம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் மூலவருக்கு எதிரே மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் முற்பகல் 11.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் ரக்ஷாபந்தனம் என்ற காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இவ்விழாவானது வரும் 30-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரு வேலைகளிலும் நாகம், சிம்மம், பூதம், கேடயம் உள்ளிட்ட வாகனங்களில் முருகன் வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

நான்காம் நாள் நிகழ்ச்சியில் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் யானை வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் முதல் சம்ஹாரமான கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மேற்கு ரத வீதியில் இரண்டாம் சம்ஹாரமான சிங்கமுகாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஆறாம் நாள் (27ம் தேதி) சண்முகநாதர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வடக்கு ரத வீதியில் மூன்றாம் சம்ஹாரமான பானுகோபனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற்ற பின்னர், விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் மாலை 6.00 மணிக்கு மேல் கிழக்கு ரத வீதியில் நடைபெறும்.

தொடர்ந்து 28-ம் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபோகம் நடக்கிறது. 29-ம் தேதி வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுவாமி திருக்கல்யாண கோலத்தில் திருவீதி உலாவும், 30-ம் தேதி பள்ளியறை மற்றும் ஏகாந்த சேவையுடன் கந்தசஷ்டி விழா நிறைவுபெறுகிறது.

விழா நாட்களில் கந்தசஷ்டி அரங்கில் தினமும் ஆன்மீக சொற்பொழிவுகள் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறும்.

மதுரை மாவட்டம் கள்ளழகர் கோவில் மலைமேல் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலையிலும் கந்த சஷ்டி விழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் காலையில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க காப்பு கட்டுதல் நடைபெற்றது. மாலையில் சுவாமி கேடயத்தில் புறப்பாடு நடந்தது.

வருகிற 27-ந் தேதி சூரசம்ஹாரம், 28-ந் தேதி திருக்கல்யாணம், 29-ந் தேதி தினைப்புனம் காத்தல், 30-ந் தேதி விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்று கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.

அதேபோல் திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் மேட்டுராஜக்காபட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள முக்கிய முருகன் கோவில்களில் காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இந்த கோவில்களில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடக்கிறது.

நத்தம் தண்டபாணி சன்னதி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சன்னதியில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பால், பழம் பன்னீர், இளநீர், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறும் இந்த கந்த சஷ்டி திருவிழாவில் தினமும் காலை, மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் .

Tags:    

மேலும் செய்திகள்