குலசை தசரா திருவிழா.. வேடமணியும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் ஜாதியை குறிக்கும் கொடிகளோ, ரிப்பன்களோ கொண்டு வரக்கூடாது.;

Update:2025-09-26 11:11 IST

குலசை தசரா திருவிழா தொடங்கி உள்ள நிலையில் காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிய தொடங்கினர். இவர்கள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ம் திருவிழாவான 2-ந் தேதி வரை ஊர்வலமாக சென்று, கலை நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், மக்களிடம் இருந்து காணிக்கைகளை பெற்று கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

அந்த பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

வேடம் அணிபவர்களின் உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிய வேண்டும். எந்த வேடம் அணிந்தாலும் அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும்.

அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் ஜாதியை குறிக்கும் கொடிகளோ, ரிப்பன்களோ கொண்டு வரக்கூடாது.

காளிவேடம் அணியும் பெண் பக்தர்கள் 10 வயதுக்கு உட்பட்டவர்களாகவோ அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ இருத்தல் வேண்டும்.

வருகிற 2-ந் தேதி நள்ளிரவில் மகிஷாசுர சம்ஹாரம் முடிந்தபிறகு அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டியது இல்லை. காப்பு அவிழ்க்கும் நேரத்தை தெரிந்து கொண்டு அவரவர் சொந்த ஊரில் உள்ள கோவில்களில் காப்பு அவிழ்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்