குலசேகரன்பட்டினம் தசரா: நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா
6-ம் திருவிழாவான இன்று சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.;
குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
4-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு மயில் வாகனத்தில் பாலசுப்ரமணியர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா வருதல் நடைபெற்றது.
5-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்காலத்தில் அம்மனை தரிசித்தால் நன்மக்கள் பேரு கிடைக்கும் என்பது ஐதீகம்.
6-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.