மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம்.. சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.;

Update:2025-11-14 16:55 IST

மயிலாடுதுறையில் உள்ள காவிரிக்கரையில் அம்பாள் மயிலாக இறைவனை பூஜித்ததாக கோவில் தல புராணம் கூறுகிறது. காவிரியில் ஐப்பசி மாதம், கங்கை முதலான புண்ணிய நதிகள் கலந்து ஓடுவதாக ஐதீகம். இதனை முன்னிட்டு, மயிலாடுதுறையில் காவிரியை மையப்படுத்தி துலா உற்சவம் நடைபெறும்.

ஐப்பசி மாதம் 10 நாட்களும் மயிலாடுதுறையில் அமைந்துள்ள அனைத்து கோவில்களில் சாமி, அம்பாள் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

Advertising
Advertising

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான துலா உற்சவம் மயூரநாதர் கோவில், வதான்யேஸ்வரர் கோவில், படித்துறை விஸ்வநாதர் கோவில், அய்யாரப்பர் கோவில், காசி விஸ்நாதர் கோவில் ஆகிய கோவில்களில் கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண விழா நேற்று இரவு நடைபெற்றது.

மயூரநாதர் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வையொட்டி, மயூரநாதர் - அவையாம்பாள் சர்வ அலங்காரத்தில் திருமண மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு, பெண்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர். பின்னர் சிவாச்சாரியார், வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத, மாங்கல்ய தாரணம் எனப்படும் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன 24-வது மடாதிபதி அம்பலவான தேசிக பரமாச்சாரிய சாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

 

வதான்யேஸ்வரர் கோவில்

இதே போல மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வரர் திருக்கோவிலிலும் துலா உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, யாகசாலை மண்டபத்திற்கு சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர். பாலச்சந்தர் சிவாச்சாரியார் தலைமையில் யாகம் வளர்த்து, வேதமந்திரங்கள் முழங்க, பெண்கள் சீர்வரிசை எடுத்து வர, தருமபுர ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் மாலை மாற்றுதல் மற்றும் மாங்கல்யதாரணம் செய்து, திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மற்றும் அம்பாள் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் அகோரம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகன், உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்