மண்டல பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
சபரிமலையில் நடப்பாண்டின் மண்டல பூஜை டிசம்பர் 27-ந்தேதி நடக்கிறது.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில், நடப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16-ந்தேதி(நாளை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அப்போது சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்பார்கள். மறுநாள் 17-ந்தேதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.
நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி நடை திறக்கப்படும். நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 14-ந்தேதி நடைபெறும். தொடர்ந்து 20-ந்தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.
பின்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டு 17-ந்தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் மாதம் 14-ந் தேதி திறக்கப்பட்டு 19-ந்தேதி அடைக்கப்படும். நடப்பாண்டு சபரிலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் 90 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்யதுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம் என்றும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேசம்போர்டு தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 1-ந்தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.