திருவண்ணாமலை: புனரமைக்கப்பட்ட பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்- பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்

பஞ்ச மூர்த்திகள் தேர்களில் ஒன்றான பராசக்தி அம்மன் தேர் ரூ.72 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளது.;

Update:2025-11-14 17:05 IST

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 21-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 24-ந் தேதி கோவிலில் சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் விழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், 7-ம் நாள் விழாவான 30-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலையில் முதலில் விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேர் நிலைக்கு வந்த பின்னர் முருகர் தேர், அதனை தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தேர், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என ஒன்றன் பின் ஒன்றாக கோவில் மாடவீதிகளில் வலம் வருவது வழக்கம்.

இந்த விழாவை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் தேர்களில் ஒன்றான பராசக்தி அம்மன் தேர் ரூ.72 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 45.11 அடி உயரமுள்ள 150 டன் எடையுள்ள அம்மன் தேரில் நான்கு புதிய மரச் சக்கரங்கள், தேரின் மேல் 5 நிலைகள், உச்சியில் அமைந்துள்ள மேல் கூண்டு போன்றவை புதியதாக அமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு உள்ளது.

புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில் இன்று காலை 10 மணியளவில் அம்மன் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில் இணை ஆணை பரணிதரன் தலைமை தாங்கினார்.

இதையொட்டி மாட வீதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள். அதேபோல் வெள்ளோட்டத்தின்போதும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் அசைந்து ஆடியபடி மாடவீதியில் வலம் வந்தது. மேலும் தேர் வெள்ளோட்டத்தையொட்டி மாட வீதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. 

தேர் வெள்ளோட்டத்தை காண திருவண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்