வல்லக்கோட்டை முருகன் கோவிலில் விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் தொடங்கின
கும்பாபிஷேகத்திற்கு சுமார் 1 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.;
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு முருகன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
மூலவர் சன்னதி பழுது பார்த்து புதுப்பித்தல், விநாயகர், சண்முகர், திரிபுரசுந்தரி அம்மன், உற்சவர் சன்னதிகள் புதுப்பித்தல், இடும்பன், கடம்பன், பைரவர் சன்னதிகள், வடக்கு ராஜகோபுரம் கட்டுதல், அனைத்து கோபுரங்கள் விமானங்கள் வண்ணம் தீட்டுதல் ஆகிய பணிகள் சுமார் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9மணிக்குமேல் 10.30மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் பின்புறம் 49 யாக குண்டத்துடன் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்தை 108 சிவாச்சாரியார்களும் 9 ஓதுவார்களும் சேர்ந்து நடத்தி வைக்கின்றனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விநாயகர் பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. இன்று மாலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. சனிக்கிழமை இரண்டாம் காலம் மூன்றாம் கால யாக பூஜைகளும் ஞாயிற்றுக் கிழமை நான்காம் காலம் ஐந்தாம் கால யாக பூஜைகளும் திங்கட்கிழமை காலை ஆறாம் கால யாக பூஜையும் நடைபெறுகின்றது. அன்று காலை 9மணிக்கு மேல் 10.30மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகத்தின் மூலம் 40 மொபைல் டாய்லட் வசதி, குடிநீர் வசதி மேற்கொள்ளப்பட உள்ளன. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திருக்கோவிலுக்கு கும்பாபிஷகம் நடைபெற உள்ளதால் வல்லக்கோட்டை கிராமத்தினர் ஆர்வத்துடன் பூஜைகளில் கலந்துகொண்டு வருகின்றனர். கும்பாபிஷேகத்திற்கு சுமார் 1 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவுப்படி காஞ்சீபுரம் இணை ஆணையர் குமரதுரை மேற்பார்வையில் கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்தேவராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் குழுவினர் செய்து வருகின்றனர்.