குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

குன்றத்தூர் நகைமுகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.;

Update:2025-07-07 11:22 IST

குன்றத்தூர்,

குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் உபய கோவிலான அருள்மிகு நகைமுகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் சேக்கிழார் பெருமானுக்கு காட்சியளித்த சிறப்பு மிக்க தலமாகும்.

ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேக விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோவில் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்து, முதல் முறையாக இந்த கோவிலுக்கு ராஜகோபுரமும் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாராக இருந்தது.

இந்த நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஜூலை 1-ம்தேதி குன்றத்தூர் செல்லியம்மன் கோவிலில் கிராம தேவதை வழிபாடு நடைபெற்றது. 2-ம்தேதி தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 3-ம்தேதி மங்கல இசையுடன் நவகிரக ஹோமம் பூர்ணாகஹூதி, தீபாராதனையும், 4-ம் தேதி அஷ்டலட்சுமி ஹோமம் அக்னி ஸங்க்ரஹனம், தீர்த்த ஸங்க்ரஹனம், தீபாராதனையும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், ஸம்ஹிதா ஹோமம், பிரதான மூர்த்தங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது. இதையடுத்து பரிகார பூஜை, கும்ப அலங்காரம், யாத்ரா ஹோமம், பிரதான கும்பங்கள் யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜையுடன் தீபாராதணை நடைபெற்றது. நேற்று காலையில் சிறப்பு பூஜைகளுடன் இரண்டாம் கால யாக பூஜையும் தீபாராதணையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை மற்றும் உபசாரங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் இன்று காலை மங்கல இசைடன் நான்காம் கால யாக பூஜை செய்யும் தீபாரதனையும், சிறப்பு ஹோமமும் நடைபெற்றன. இதையடுத்து நகை முகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் மூலவர் விமானத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனையும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சர்வ சாதக திலகம் பெருநகர் பாலாஜி சிவாச்சாரியார், சர்வசாதகம் திருவள்ளூர் ஹரி பிரபு சிவாச்சாரியார், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் கார்த்திகேய குருக்கள், ஸ்தானிகர்கள் நந்தகுமார், ரகு, முரளி, ரவி, அருண், பிரதாப், உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு தேவார, திருவாசக, வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று மாலையில் திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்தி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவில் பொதுமக்கள் எந்த வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்ய முன்னேற்பாடுகள், தேவையான அடிப்படை வசதிகள், முதலுதவி, போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன் தலைமையில் அறங்காவலர்கள் சரவணன், குணசேகரன், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீ கன்யா, அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்