மாதவரம்: பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்: நாளை நடைபெறுகிறது
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பாலமுருகன் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடைபெறுகிறது.;
சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பிரகாஷ் நகரில் ஸ்ரீ பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர், பிரசன்ன வெங்கடாஜலபதி, ஐயப்பன், காலபைரவர், பக்த ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிவடைந்தது.
இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. காலை 6.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை மற்றும் ஹோமமும், காலை 9 மணியளவில் விஷேச தீபாரதனை, சங்கல்ப பூஜைகளும் நடைபெறுகின்றன. காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மூலவர் பாலமுருகன் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அதன்பின்னர் பாலமுருகன் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு அருட்பிரசாதமும் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு உற்சவர் வள்ளி, சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா வைபவம் நடைபெறுகிறது.