மதுரை ஆவணி மூல திருவிழா: உலவாக்கோட்டை அருளிய அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்

சிவனடியாருக்கு வரம் அளித்த திருவிளையாடலை உணர்த்தும் வகையில் தங்கக்குடுவையுடன் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தார்.;

Update:2025-08-31 12:10 IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல்களை பக்தர்களுக்கு உணர்த்தும் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் தினமும் எழுந்தருளி வருகிறார். 5-ம் நாளான நேற்று காலை உலவாக்கோட்டை அருளிய கோலத்தில் காட்சி தந்தார்.

இதையொட்டி தனது கரத்தில் தங்க குடுவையை ஏந்தி சுந்தரேஸ்வரர் காட்சி அளித்தார். உடன் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். நெற்பயிர் முடிச்சுகள் சுவாமி பாதத்தில் வைக்கப்பட்டு இருந்தன.

உலவாக்கோட்டை அருளிய படலம்

அடியார்க்கு நல்லார் என்ற சிவனடியார் மதுரையில் தினமும் மற்ற சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே உணவு உண்பது என்ற கொள்கையுடன் இருந்தார். இதனால் அவரது செல்வம் வற்றியது. ஆனாலும் அவர் கடன் பொற்றாவது தனது கடமையை ஆற்றி வந்தார். தொடர்ந்து கடன் வாங்கியதால், அவருக்கு ஒருகட்டத்தில் கடன் கிடைக்கவில்லை. எனவே அவர் தனது மனைவியுடன் சோமசுந்தரரை தரிசித்து பின்னர், உயிரை மாய்ப்பது என்று எண்ணி கோவிலுக்கு சென்றார்.

அவரது தருமநெறியின் உண்மை நிலையை அறிந்த இறைவன் அசரீரியாக ஒலித்தார்.

“வீட்டிற்கு செல். அங்கே உனக்காக அள்ள அள்ள குறையாத நெல்மணிகளை தரும் உலவாக்கோட்டை (அமுதசுரபி போன்ற குடுவை) ஒன்றை அளித்துள்ளோம்” என்று இறைவன் கூறக்கேட்டார். அதன்படியே இருவரும் வீடு திரும்பினர். உலவாக்கோட்டை என்ற குடுவை மூலம் கிடைத்த நெல்மணிகளை கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்க்கு உணவளித்து அடியார்க்கு நல்லார் வாழ்ந்தார் என்று இந்த திருவிளையாடல் உணர்த்துகிறது.

ஆவணி விழாவில் நேற்று இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளை வலம் வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்