மதுரை ஆவணி மூல திருவிழா: பாணனுக்காக அங்கம் வெட்டிய திருவிளையாடல் லீலை

பக்தனின் மனைவியின் மானம் காக்க, இறைவன் செய்த திருவிளையாடலை விளக்கும் வகையில் இன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.;

Update:2025-08-31 15:50 IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல்களை பக்தர்களுக்கு உணர்த்தும் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் தினமும் எழுந்தருளி வருகிறார். 5-ம் நாளான நேற்று உலவாக்கோட்டை அருளிய கோலத்தில், தனது கரத்தில் தங்க குடுவையை ஏந்தியபடி சுந்தரேஸ்வரர் காட்சி அளித்தார். உடன் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். நெற்பயிர் முடிச்சுகள் சுவாமி பாதத்தில் வைக்கப்பட்டு இருந்தன.

விழாவின் 6-வது நாளான இன்று பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை (அங்கம் வெட்டின படலம்):

மதுரையை ஆண்ட குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வயது முதிர்ந்த வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவருடைய சிஷ்யர்களில் சித்தன் என்பவன் மிகவும் தீய குணங்கள் கொண்டவன். பயிற்சி முடித்து சென்ற அவன் தானும் ஒரு பயிற்சி பள்ளி அமைத்தான். அங்கு தனக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியரின் மாணவர்களையெல்லாம் அங்கு அழைத்துக்கொண்டான். மேலும் ஆசிரியரின் மனைவியிடமும் தவறாக நடக்க முயற்சி செய்தான்.

இதை அறிந்த பாணன், சோமசுந்தரரிடம் முறையிட்டான். அதனால் இறைவனும் ஆசிரியர் வேடம் தாங்கி சென்று சித்தனை வாள் போருக்கு அழைத்தார். ஆசான் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், அந்த பெண்ணை தொட்ட கைகளையும், கண்ட கண்களையும் காத்துக்கொள் என்று கூறி ஒவ்வொரு அங்கமாக வெட்டினார். இறுதியில் அவனது தலையையும் வெட்டினார், இறைவன்.

இதை அறிந்த மன்னன் குலோத்துங்க பாண்டியன், ஆசிரியருக்கு தக்க மரியாதைகள் செய்து கௌரவித்தார் என்று புராண வரலாறு கூறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்