மதுரை ஆவணி மூல திருவிழா: வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் சிவபெருமான்
ரிஷிபத்தினிகளின் சாபத்தை போக்க வளையல் வியாபாரியாக வந்து சிவபெருமான் நடத்திய லீலையை பட்டர் நடித்து காட்டினார்.;
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல்களை பக்தர்களுக்கு உணர்த்தும் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் தினமும் எழுந்தருளி வருகிறார். அவ்வகையில், திருவிழாவின் 7-ம் நாளான இன்று காலை வளையல் விற்ற லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்த பட்டர் வளையல் விற்ற லீலையை நடித்து காண்பித்தார். பின்னர் சுவாமி தங்க பல்லக்கிலும் , அம்மன் தங்க பல்லாக்கிலும் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.
வளையல் விற்ற லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:
தாருகாவனத்து ரிஷிகள் தங்கள் மனைவியரே கற்பில் சிறந்தவர்கள் என்று செருக்குற்றிருந்தனர். அச்செருக்கை அடக்க எண்ணிய சொக்கநாதர் பிட்சாடனர் கோலத்தில் தாருகாவனத்திற்கு சென்றார். அங்கு பிச்சையிட வந்த அத்தனை ரிஷிபத்தினிகளும் அவரது அழகில் மயங்கி, தங்களின் வளையல்கள் மற்றும் மேகலைகளை திருவோட்டில் இட்டனர்.
பிட்சாடனர் வடிவத்தில் வந்த இறைவனைக் கண்டு மயங்கியதால் தங்கள் மனைவிகள் மீது கோபமுற்ற ரிஷிகள், அந்த பெண்களை மதுரையில் சாதாரண வணிகர் குல பெண்களாக பிறக்கும்படி சபித்தனர். தங்கள் தவறை உணர்ந்து சாபவிமோசனம் கேட்ட ரிஷிபத்தினிகளுக்கு ‘இறைவனே நேரில் வந்து உங்கள் கைகளிலே வளையல் சூடுவார். அப்போது உங்கள் சாபம் தீர்ந்து எங்களை வந்தடைவீர்கள்’ என்று கூறினார்கள்.
அவ்வாறு ரிஷிபத்தினிகளும் பெண்களாக மதுரையிலே பிறந்து வளர்ந்தனர். அவர்களின் சாபத்தை போக்க இறைவனும் வளையல் வியாபாரியாக தெருவில் வந்து, அவர்களின் கைகளை தொட்டு வளையல் அணிவித்தார். உடனே அவர்களின் சாபம் நீங்கியதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.