திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மஹா ஆரத்தி திருவிழா
நீர்நிலைகளைப் பாதுகாத்து பராமரிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை மையமாகக்கொண்டு மஹா ஆரத்தி பெருவிழா நடைபெற்றது.;
108 வைணவத் திருத்தலங்களில் 76வது புண்ணிய திருத்தலமாக விளங்குவது திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஆகும். இந்த கோவிலைச் சுற்றி ஓடும் புண்ணிய ஆறான பரளி ஆறு அருவிக்கரை சப்த கன்னிகை, கோவிந்தம், அமிர்தம், ராமம், திருப்பாதக்கடவு, சக்கரம் புண்ணிய தீர்த்தங்கள் என்ற பெயரில் ஆறு இடங்களில் அருள் பாலிப்பதாக ஐதிகம்.
வரும் தலைமுறையினர் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டும் வகையில் நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும், தூய்மையாக வைத்திருக்கவும், போற்றவும், ஜீவ நதிகளை நிலைபெறச் செய்யவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை மையமாகக்கொண்டு நேற்று மஹா ஆரத்தி பெருவிழா நடைபெற்றது.
ஆதிகேசவப்பெருமாள் கோவில் மேற்குவாசல் பகுதியில் பரளியாறு ஓடும் பகுதியில் உள்ள படித்துறை மற்றும் ஆரத்தி நடைபெறும் பகுதிகளில் மஹா ஆரத்தி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
ஆரத்தி திருவிழாவையொட்டி அந்த பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலை 6 மணி அளவில் மஹா ஆர்த்தி விழா தொடங்கி இரவில் நிறைவடைந்தது.