மகாளய அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் கட்டண தரிசன முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.;
புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு ஆடி, தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். அமாவாசை நாட்களில் இங்கு வருகை தரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்து கோவிலில் சாமியை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.
அதன்படி, இந்த ஆண்டின் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்காக இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதல் பிற்பகல் வரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்கள். இவ்வாறு புனித நீராடிய பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து, தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திதி தர்ப்பண சங்கல்ப பூஜை செய்தும் வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து கோவிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் புனித நீராடுவதற்கு வடக்கு கோபுர வாசலில் இருந்து கிழக்கு கோபுர வாசல் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று நின்று ஒன்றன்பின் ஒன்றாக சென்று தீர்த்த கிணறுகளில் புனித நீராடினார்கள். மேலும் சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து 2-ம் பிரகாரம், மூன்றாம் பிரகாரம், கிழக்கு வாசல், தெற்கு கோபுர வாசல் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்து சென்றனர்.
அதுபோல் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததை தொடர்ந்து கட்டண தரிசன முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருமே கட்டண தரிசன பாதை மற்றும் பொது தரிசன பாதையில் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் ஏராளமான திருக்கோவில் பணியாளர்கள் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் தலைமையில் ஏ.எஸ். பி.மீரா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட போலீசார் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் ரத வீதிக்குள் அரசு பேருந்து உள்ளிட்ட எந்த ஒரு வாகனங்களும் பிற்பகல் வரை அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடலில் புனித நீராடுவதற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அக்னி தீர்த்த கடற்கரை, கோவில் ரதவீதி, திட்டக்குடி சந்திப்பு, சன்னதி தெரு, வர்த்தகன் தெரு என நகரின் பல்வேறு முக்கிய இடங்களிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே இருந்தது.