வேடசந்தூர் மாரியம்மன் கோவில் திருவிழா
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
வேடசந்தூர் கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 20ஆம் தேதி திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் ஒவ்வொரு பகுதியை சார்பாக மண்டகப்படி நடைபெற்றது. நேற்று முன் தினம் அதிகாலை கரகம் ஜோடிக்கப்பட்டு மாரியம்மன் கோவில் வந்தடைந்தது. பின்னர் பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி மற்றும் தீச்சட்டி எடுத்து வந்து கோவிலில் வைத்து வழிபட்டனர்.
இந்நிலையில் நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் அலகு குத்தியும், தங்களது குழந்தைகளை தோளில் சுமந்துகொண்டும் பூக்குழி இறங்கினர்.