ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் - களைகட்டிய திருச்செந்தூர் முருகன் கோவில்
கோவிலுக்கு உள்ளேயும், கோவில் பிரகாரங்களிலும் ஏராளமானோர் திருமணம் செய்து கொண்டனர்.;
திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. நாள்தோறும் திருச்செந்தூர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் வளர்ப்பிறை முகூர்த்த தினத்தையொட்டி 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் செய்து கொள்வதற்காக ஏராளமான மணமக்கள் வந்த நிலையில் கோவிலுக்கு உள்ளேயும், கோவில் பிரகாரங்களிலும் ஏராளமானோர் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தை நடத்தவும் மணமக்களை வாழ்த்துவதற்காகவும் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் உறவினர்கள் கூட்டத்தால் கோவில் வளாகம் கூட்ட நெரிசலாக காணப்பட்டது. கோவில் வளாகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் நெரிசல் காணப்பட்டது.