உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக தொடங்கியது

புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் பானு முஷ்தாக், சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர் தூவி தசரா விழாவை தொடங்கி வைத்தார்;

Update:2025-09-22 11:17 IST

கர்நாடகத்தின் ‘நாடஹப்பா’ என்றழைக்கப்படும் மைசூரு தசரா விழா மன்னர் காலத்தில் இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க 415-ம் ஆண்டு தசரா விழா இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் மீது பூக்களை தூவி முக்கிய பிரபலங்கள் தொடங்கி வைப்பார்கள். அதுபோல் இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் பானு முஷ்தாக் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த விழாவை பானு முஷ்தாக் தொடங்கி வைக்கக் கூடாது என முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் திட்டமிட்டப்படி சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை  விருச்சிக லக்கனத்தில் தசரா விழா தொடங்கியது. விழாவை புக்கர் விருது பெற்ற பானு முஷ்தாக் தொடங்கி வைத்தார். அதாவது வேத மந்திரங்கள் முழங்க, வெள்ளித்தேரில் எழுந்தருளிய சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு எழுத்தாளர் பானு முஷ்தாக் மலர் தூவியும், குத்து விளக்கு ஏற்றி வைத்தும் தசரா விழாவை தொடங்கிவைத்தார்.

முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரிகள் பரமேஸ்வர், ராமலிங்க ரெட்டி, சிவராஜ் தங்கடகி உள்பட பல மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கலந்துகொண்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர் தூவி வணங்கினர்.

அரண்மனையில் நவராத்திரி விழா

தசரா விழா தொடங்கிய பிறகு மைசூரு அரண்மனையில் நவராத்திரி விழா, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதனை மன்னர் யதுவீர் தொடங்கி வைத்தார். அதையடுத்து அரண்மனை வளாகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து தர்பார் மண்டபத்தில், அலங்கரிக்கப்பட்ட நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில்அமர்ந்து மன்னர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துகிறார். அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வார். மேலும் அரண்மனை வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

இதுதவிர தசரா விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) குப்பண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, மகாராஜா கல்லூரி மைதானத்தில் உணவு மேளா, மானஷ கங்கோத்ரி வளாகத்தில் மல்யுத்த போட்டிகள் தொடங்குகின்றன.

மின்விளக்கு அலங்காரம்

தசரா விழாவையொட்டி மைசூரு நகர் முழுவதும் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. மின்விளக்கு அலங்காரத்தை முறைப்படி முதல்-மந்திரி சித்தராமையா மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார். முன்னதாக அரண்மனை வளாகத்தில் உள்ள பழைய மேடையில் கலாசார நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலைஞர்களுக்கு பாராட்டு மற்றும் விருதுகளை முதல்-மந்திரி சித்தராமையா வழங்குகிறார்.

தசரா விழாவை முன்னிட்டு சாரட் குதிரை வண்டிகள் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல அரண்மனையை சுற்றிலும் நின்று கொண்டிருக்கின்றன. தசரா விழா தொடங்க உள்ளதால் மைசூரு மாநகருக்கு கர்நாடகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்களும், வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்