நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை.. பெருமாளின் அருள் கிடைக்க இதை செய்யுங்க..!
புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நாளை ஆலயம் செல்ல இயல்விட்டால் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப் படத்தை வைத்தும் வழிபடலாம்.;
நாளை (20.9.2025) புரட்டாசி முதல் சனிக்கிழமை. ஜாதக அமைப்பின்படி சனி திசை, புதன் திசை நடப்பவர்கள் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என சனியின் பிடியில் இருக்கும் ராசியை சேர்ந்தவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட சகல தடைகள், சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள் நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுவையும் வழிபடுகிறார்கள்.
சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8-ல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும், 12-ல், 1-ல், 2-ல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும். இதைச் சனிதோஷம் என்பர். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் குருவின் நிறமாகிய மஞ்சளாடை அணிந்து சந்திரனின் காரகமாகிய உணவினை (தளிகை) சனியின் காரகமாகிய மண்பாத்திரத்தில் இட்டு ஏழுமலையானுக்கு படையலிட தோஷம் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமையில் சந்திரனின் காரகமாகிய பச்சரிசி மாவில் சுக்கிரனின் இனிப்பு வெல்ல பாகு மற்றும் ஏலக்காய் சேர்த்து சனியின் எள் சேர்த்து குருவின் நெய்யில் மாவிளக்கு வைத்து வழிபட புனர்பூ தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லபலனை தரும். புரட்டாசி சனிக் கிழமையில், ஆலயம் சென்று பெருமாளை தரிசிப்பதுடன், அங்கே நம்மால் முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவதும், அன்னதானம் செய்வதும் மும்மடங்குப் பலனை தந்தருளும்.
புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நாளை ஆலயம் செல்ல இயல்விட்டால் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப் படத்தை வைத்தும் வழிபடலாம்.
புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம்.