புரட்டாசி மாத பிறப்பு: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு.. திரளான பக்தர்கள் தரிசனம்

திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் நாளான இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;

Update:2025-09-17 19:20 IST

புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியது. மாதத்தின் முதல் நாளான இன்று காலையில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனை தொடர்ந்து கோவிலில் தேவநாத சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் திரளான பக்தர்கள் அதிகாலை முதல் திரண்டு வந்து கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷம் எழுப்பி சாமி கும்பிட்டனர்.

Advertising
Advertising

புரட்டாசி முதல் தேதி மற்றும் ஏகாதசி என ஒரே நாளில் பெருமாளுக்கு விசேஷமான தினம் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. மாதம் முழுவதும் கூட்டம் அதிகரித்து காணப்படுவதோடு, சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தலைமுடி காணிக்கை செலுத்தி, பகவானை வழிபடுவார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

 

கும்பகோணம்

கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களான சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, ராஜகோபாலசாமி, வராகப் பெருமாள் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை வழிபட்டனர். சாரங்கபாணி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்

திருவண்ணாமலை-தேசூர்

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் நகரில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பிறப்பு முன்னிட்டு சுவாமி மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் முத்து கொண்டை அலங்காரம் செய்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேச பெருமாள் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது பக்தர்கள் மாக்கோலமிட்டு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். பக்தர்கள் பெரிய திருவடி சிறிய திருவடி வேடமணிந்து மேளதாளத்துடன் பக்தி பாடல் பாடி உடன் வந்தனர். பின்னர் அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

 

மதுரை வடக்கு மாசி வீதி நவநீத கிருஷ்ணன் கோவிலில், புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு, ஊஞ்சல் சேவையில் கிருஷ்ணர் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு கோ பூஜை வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசுமாடு மற்றும் கன்றுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பசு மாட்டிற்கு பழங்கள், அகத்திக்கீரை வழங்கி வலம் வந்து வழிபட்டனர். இதேபோல் காட்சி கொடுத்த நாயகர் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்